பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லையில் நந்திமலைச் சாரலில் வசந்த காலத்தில் ஒருநாள் காலை நேரம்! அங்கே பாறையைப் பின்னணியாகக் கொண்டு நீண்ட சதுர வடிவத்தில் ஒரு மண்மேடை அமைக்கப்பட்டிருந்தது.
அந்த மண்மேடையில் ஒருபுறம் பதினைந்து இளங்குமரிகள் நடன உடை தரித்து அஞ்சலி முத்திரையுடன் கண்களை மூடித் தியானத்தபடி நாட்டியத்திற்குச் சித்தமாக நின்றார்கள்! இன்னொருபுறம் பதினைந்து இளங்குமாரர்கள் அதே போல் சித்தமாக நின்றார்கள்! அவர்களுக்கெதிரே ஆசனம் போன்று அமைந்து ஒரு பாறை மேல் மதங்க முனிவர் தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார்.
அவருக்கு இடதுபுறத்தில் தரையில் நான்கு இளம்பெண்கள் இசைக்கருவிகளுக்கு ஸ்ருதி ஊட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு வலது புறத்திலே சில பார்வையாளர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிலே இரண்டு இளைஞர்கள் புதுமுகங்களாகத் தென்பட்டார்கள்!
யாழின் மெல்லிய இசை ஸ்ருதியை இழைத்தது.
மதங்கதேவர் ஒரு ஜதிஸ்வரத்தைப் பாடத் தொடங்கினார்.
‘ஸா, தாபாம கா ப ரிக பாம கரீ
கரீ ஸாரிஸா தத ஸா ரீ கா பா பதரீஸா
ஸா ரி கா பபத ரி....'
அந்த வித்யார்த்திகள் மிகவும் சுறுசுறுப்பாக தாளக்கட்டு விடாமல் நடனம் செய்தார்கள்!
பெண்கள் பகுதியில் முன்னால் நின்றிருந்த ஓர் அழகிய இளங்குமரி மிகச்சிறப்பாக ஆடி அடவுகளைத் தெளிவாக அபிநயித்தாள்! சிலர் தவறு செய்யும் பொழுது மதங்கர் இடைமறித்து, அந்தப் பெண்ணை மறுபடி ஆடச் செய்து மற்ற வித்யார்த்திகளும் அதைக் காணும்படிச் செய்தார். இதற்குப் பிறகு சில சித்தர் பாடல்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக அபிநயித்துக் காட்டினார்கள்.
இப்படி அந்த நடனப்பயிற்சி ஏறத்தாழ ஆறு நாழிகைகள் நடைப்பெற்றன. பின்னர் அது முடிந்ததற்கு ஆசார்யர் ‘சமிக்ஞை' செய்யவே வித்யார்திகள் ஒவ்வொருவரும் வந்து தனித்தனியாக அவரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பெண்களின் முதன்மையாக நின்ற அந்த இளம்பெண் மிகவும் அடக்கத்துடன் ஆசார்யர் முன் வந்து வணங்கி எழுந்து விநயமாகத் தெரிவித்தாள்!
‘ஆசார்யதேவரே! தங்களை நமஸ்கரிக்க இரண்டு புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்!'
மதங்கர் கண்களைத் திறந்து பார்த்தார்.
அந்த இரண்டு இளைஞர்களும் முன்னால் வந்து சில பழங்களை அவர் முன் ஒரு தட்டில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ‘அபிவாதநம்' சொன்னார்கள்.
‘ஆசார்யதேவா! நாங்கள் இருவரும் பல்லவ நாட்டைச் சேர்ந்தவர்கள்!.. காஞ்சிக்கு அருகே உள்ள ஸ்ரீபுரத்திலிருந்து வருகிறோம்!... என் பெயர் ‘குணசேனன்'. இவன் என் நண்பன் ‘வித்யாதரன்'! நாங்கள் இருவரும் காஞ்சியில் சிலகாலம் நடனமும், இசையும் பயின்றவர்கள்... இந்தக் கலையை விருத்தி செய்து கொள்வதற்காக தங்கள் திருவடியை தஞ்சம் அடைந்திருக்கிறோம்... எங்களுக்கு அநுக்ரஹிக்க வேணும்!...'
‘நீங்கள் இருவரும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்?..'
‘ஸ்வாமி... நாங்கள் இருவரும் க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.. அடியேன் கொஞ்சம் ‘சாமகானம்' ‘அத்யயனம்' செய்திருக்கிறேன்.
‘மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் எந்த ஆசாரியரிடம் நடனமும் இசையும் பயின்றீர்கள்...'
‘குலபதி ஆசார்யர் ருத்ராசாரியாரிடம் பயின்றிருக்கிறோம்..'
‘ஆஹா... அவரிடம் தான் அடியேன் சிறுவயதிலே பாடம் பயின்றேன். அவருடைய ஆக்ஞையின் பேரில் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்திமலைச் சாரலில் குருகுலத்தை அமைத்துக் கொண்டேன். அவர்தான் எப்பேர்பட்ட மகாபுருஷர்... அவர் சுகமாக இருக்கிறாரா?...
‘ஸ்வாமி, அவர் ‘காலகதி' அடைந்து இரண்டாண்டுகள் ஆகி விட்டன. அவர் தான் கடைசித் தறுவாயில் தங்கள் பெயரைச் சொல்லி, தங்களிடம் எங்கள் ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுமாறு பணித்தார்.'
'அப்படியா, நீங்கள் இருவரும் குருகுலத்திலே தங்கிப் பாடம் கேட்கலாம்'
இளைஞர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.
‘தீர்காயுஸ்மான் பவா!.. பிரியவாதினி இந்த பிரம்மச்சாரிகளை நம்முடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாயாக!..”
'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று அந்த இளநங்கை நமஸ்கரித்து எழுந்தாள்.
பிரியவாதினி அந்த இரண்டு இளைஞர்களையும் மிகவும் பணிவுடன் அழைத்துச் சென்றாள். அந்த இடத்திலிருந்து அரை நாழிகை தொலைவில் மதங்கருடைய ஆஸ்ரமம் தென்பட்டது. அதை ஒட்டி பல குடில்கள் இருந்தன. .
ஒருபுறம் இளங்குமரர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இளம்பெண்களோடு சற்று வயது முதிர்ந்த தாதிமார்களும் பலவித அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அகன்று பரந்த ஆஸ்ரமத்திலே அமைந்த நடுமுற்றத்தில் ‘ கார்ஹ பத்ய', ‘ஆன்வாஹார்யபசன', ‘ஆஹவனீய' ஆகிய மூன்று அக்னிகுண்டங்கள் லேசாகப் புகையை எழுப்பிக் கொண்டிருந்தன.
வேதம் பயிலும் வித்யார்த்திகள் சிலர் அந்த அக்னியிலே ஹோமம் செய்து கொண்டிருந்தார்கள். ஆஸ்ரமத்திற்கு பின்புறத்தில் பசுக்கள் கட்டப்பட்ட கொட்டில்களில் சில பிரம்மச்சாரிகள் பசுக்களை பராமரித்தார்கள். பெண்கள் பகுதியில் ஒரு பகுதியினர் பகல் உணவிற்காக பழங்களையும், காய்கறிகளையும் நறுக்கிக் கொண்டிருந்தார்கள்.
வயது முதிர்ந்த தாதிமார்கள் பெண்களுக்கு அலங்காரம் செய்வதிலும், நகைகளை எடுத்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
குணசேனையும், வித்யாதரனையும் பிரியவாதினி மிகவும் பணிவுடன் ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றாள். ‘ஸ்வாமி.. நீங்கள் இருவரும் இந்தக் குடிலில் தங்கிக் கொள்ளலாம்..
அங்கே ஒரு மண் பானையில் சுத்தமான நீர் இருக்கிறது. உங்கள் இருவருக்கும் எது தேவையானாலும் என்னிடம் தெரிவித்துக் கொள்ளலாம். இந்த அடியவள் அதை நிறைவேற்றக் காத்திருப்பாள்.'
குணசேனன் அவளுடைய பணிவையும் ‘அதிதி சத்கார'த்தையும் கண்டு மிகவும் வியந்து போனான். ‘பிரியவாதினி மிகவும் நன்றி'...
அப்போதுதான் குணசேனன் அவளுடைய அழகிய முகத்தை நேருக்கு நேர் கண்டான். ‘ஆஹா, இவள் தான் எவ்வளவு அழகிய பொற்கொடியாக இருக்கிறாள்! இவளுடைய அங்க அசைவும், சொல்லழகும் தான் எவ்வளவு நளினமாக இருக்கின்றன!'
தங்களுக்குத் தேவையான நடன ஆடைகளும் சதங்கைகளும் நான் கொண்டு வந்து தருகிறேன்.. சரியாக பதினைந்து நாழிகைக்கு ஆராதனை முடிந்து ஆரத்தி ஆனபின் ஆசார்ய தேவரோடு எல்லோருக்கும் பிக்க்ஷை அளிக்கப்படுகிறது. நீங்கள் அங்கே சித்தமாக வந்து விடலாம்!...'
'பெண்ணே! உன் உபசாரங்களையும் தெளிவான பேச்சையும் கண்டு மிகவும் வியக்கிறேன்... இந்த ஆஸ்ரமமே காளிதாசன் வர்ணித்த கன்வ மகரிஷி ஆஸ்ரமம் போல் காட்சியளிக்கிறது... அங்கே வாழும் சகுந்தலையாக நீ தோன்றுகிறாய்!...'
பிரியவாதினி மெல்லப் புன்னகை புரிந்தாள். அவள் கன்னங்கள் இரண்டிலும் லேசாக செம்மை படர்ந்தது.
பகுதி -1
'கிரீஷ்மருது' தொடங்கிய சமயம். மதங்க முனிவர் பகல் உணவிற்குப் பிறகு இருபது நாழிகையளவில் வழக்கம் போல தன்னுடைய அறையில் பிரியவாதினிக்கு மட்டும் அவருடைய சங்கீத இலக்கணங்களை விவரிக்கத் தொடங்கினார்.
ஒருகணம் தியானித்தபின், 'பிரியவாதினி அந்த இளைஞன் குணசேனனை இங்கே அழைத்து வா!' என்று பணித்தார்.
'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று சொல்லி துள்ளி எழுந்து பிரியவாதினி வெகு விரைவில் குணசேனனை அழைத்து வந்தாள்.
அவன் வந்து வணங்கி எழுந்ததும் மதங்கர் ஆசிர்வதித்து விட்டு, 'குணசேனா, இன்றுமுதல் பிரியவாதினியோடு சேர்த்து உனக்கும் சங்கீத இலக்கணங்களை விவரிக்க எண்ணுகிறேன். சித்தமாக இருப்பாயா?...'
'காத்திருக்கிறேன் ஸ்வாமி, அடியேன் பாக்கியம்..'
அப்போது பிரியவாதினியின் முகமும் சற்றே மலர்ந்ததை குணசேனன் கவனிக்காமலில்லை.
‘பரத முனிவருடைய இசை இலக்கணம் பல நூற்றாண்டுகளாக அப்படியே காப்பாற்றி வருகிறோமே தவிர அதை ஆராய்ந்து வளர்ச்சியடைவதற்கு யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. அந்தப்பணியை நான் சில வருட காலமாக மேற்கொண்டு சில இலக்கண விரிவாக்கங்களை சூத்திரங்களாக வடமொழிக் கவிதையில் இயற்றினேன். இதைப் பிரியவாதினி மட்டும் சிலகாலமாக என்னிடம் கற்று வருகிறாள். இதை நீயும் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு இந்த இலக்கண அலங்காரங்களைக் கற்றுத்தர ஒப்புக் கொள்வாயல்லவா?...
'தங்கள் ஆக்ஞை ஸ்வாமி..' என்று அடிபணிந்தான் குணசேனன்.
அன்று முதல் ‘ஹேமந்தருது'வின் முடிவு வரை குணசேனனும், பிரியவாதினியும் மட்டும் அந்த இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்து கொண்டார்கள். ஏறத்தாழ ஐந்நூறு ஸ்லோகங்களை இயற்றி முடித்த மதங்கமா முனிவர், இருவரையும் மனதுக்குள்ளே ஆசிர்வதித்தார்.
'ஸ்வாமி! பரதமுனிவர் எழுதிய 18 ‘ஜாதிகளை' 18 ‘ராகங்'கள் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். தங்களூடைய இலக்கண அலங்காரங்கள் மூலம் அவைகள் பதினெட்டாயிரமாகப் பெருகி வளர முடியும். இதில் துருவகானத்தில் உள்ள அலங்காரங்களை தங்கள் இலக்கணப்படி இந்த அடியவள் ஒரு தமிழ்ச் செய்யுளாக தங்கள் கிருபையால் இயற்ற முடிந்திருக்கிறது. இந்தச் செய்யுளை வித்யார்த்திகளுக்கு கற்றுக் கொடுப்பது சுலபமாக இருக்குமல்லவா?...' என்று கேட்டாள் பிரியவாதினி ஒருநாள்.
‘ஆமாம். இங்கே அநேக தமிழ்ப்புலவர்கள் இசை கற்றுக் கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.'
‘அந்தச் செய்யுளகளை தங்கள் முன் பாடிக்காட்டலாமா?'
குணசேனனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
பிரியவாதினி அந்தச் செய்யுளைப் பாடினாள்.
‘மிகவும் நன்றாக இருக்கிறது. இதை இனி வித்யார்த்திகளுக்கு நீ கற்றுத் தரலாம்!..'
குணசேனன் அடிபணிந்து, ஸ்வாமி! அடியேனும் இதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.. அடியேனுக்கு தமிழ்ச் செய்யுள் இயற்றும் புலமை இல்லை. ஆனால் வடமொழியில் கவிதை எழுதுவேன். பிரியவாதினியின் தமிழ்ப்புலமையைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைகிறேன்...' என்றான் குணசேனன்.
‘குணசேனா!.. அவள் ஒரு தமிழ்ப்புலவரின் மகள். அதுமட்டுமல்ல; இங்கே குருகுலத்திற்கு வருகின்ற தமிழ்ப்புலவர்களிடமும் தமிழ்ச்செய்யுள் இயற்றுவதற்கு கற்றுக் கொண்டு இருக்கிறாள்.. வடமொழி, தமிழ் இரண்டிலுமே இவள் புலமை பெற்றவள்!...'
'அந்தச் செய்யுளை இந்த ஏழைக்கும் கற்றுத்தரும்படி ஆசார்யர் பணிக்க வேண்டும் ஸ்வாமி!'
‘அப்படியே ஆகட்டும்' என்றார் மதங்க தேவர்.
குணசேனனும், பிரியவாதினியும் மதங்க தேவரின் இசை, இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்த பின், ஒருநாள் பிரியவாதினி கேட்டாள்.
'ஸ்வாமி! இந்த வடமொழி இசை இலக்கண சூத்திரங்களுக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டாமா?...'
‘அதைச் செய்யக் கூடிய வல்லமை பெற்றவன் குணசேனன் தான்! அவனே அதற்கு பெயர் சூட்டட்டும்!'
‘ஸ்வாமி, இது மாபெரும் இலக்கியம். இதை வடமொழியில் ‘ப்ருஹத்தேசி' என்று சொல்லலாம் என்றான் குணசேனன்.
மதங்க முனிவர் மெல்லப் புன்னகை புரிந்தார்!

‘சிசிரருது' தொடங்கும்போது ஒருநாள் பகலில் பாடத்தை முடித்தவுடன் குணசேனன், ஆசார்யரிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.
‘ஸ்வாமி ஒரு விக்ஞாபனம், அடியேன் ஸ்ரீபுரத்தை விட்டுவந்து வெகுகாலமாகி விட்டது. என்னுடைய வயதான தாய், தந்தையர் என்னைக் காண ஆவலுடன் இருப்பார்கள். தங்கள் அனுமதியின் பேரில் நான் ஒரு தடவை என் தாய் தந்தையரை வணங்கி விட்டு ஒரு மாத காலத்தில் திரும்பி வருவதாக யோசனை உதித்திருக்கிறது. தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.'
‘குணசேனா, மங்களம் உண்டாகட்டும். விரைவில் திரும்பிவர வேண்டும்' என்று ஆசிர்வதித்தார் ஆசார்ய தேவர்.
குணசேனன் அன்று மாலையில் குடிலுக்குத் திரும்பி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே சதங்கை ஒலி கேட்டது.
‘பிரியவாதினி, வரவேண்டும்... ஏன் சற்று வாட்டமுற்றிருக்கிறாய்' என்று கேட்டான் குணசேனன்.
‘ஒன்றுமில்லை ஸ்வாமி' என்று சொல்லி பிரியவாதினி சற்று மௌனமாக இருந்தாள்.
‘பிரியவாதினி, நீ எப்போதும் போல மகிழ்ச்சியாகக் காணப்படவில்லை'
‘ஸ்வாமி, இந்த ஏழை உங்களிடம் ஓர் வேண்டுகோள் விடுக்கலாமா?'
‘நிச்சயமாக, நான் செய்யக் கூடிய உதவி என்ன இருக்கிறது?'
‘ஸ்வாமி, தாங்கள் இப்பொழுது ஸ்ரீபுரத்திற்கு அவசியம் செல்ல வேண்டுமா?' -பிரியவாதினியின் அழகிய விழிகளில் ஆழங்காண முடியாத தாபமும், கவலையும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன!
‘ஆமாம். என்னுடைய வயதான தாய், தந்தையர் இவ்வளவு மாதங்களாக என்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களைக் கண்டு, ஆசி பெற்று, உடனே திரும்பி விடுவேன்.'
பிரியவாதினி சில கணங்கள் மௌனமாக நின்றாள்.
‘ஸ்வாமி! இந்த ஏழையையும் தாங்கள் அழைத்துச் செல்ல முடியாதா?...' என்று கேட்ட பிரியவாதினி விம்மல்களோடு அவன் காலடியில் விழுந்து வணங்கினாள்.
குணசேனன் பதறிப்போனான்!
‘ஸுகுமாரி!.. நீ வீணாகக் கலங்க வேண்டாம். நான் விரைவில் திரும்பி வருகிறேன்!
அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை படர்ந்தது.
‘ஸ்வாமி! தாங்கள் இல்லாமல் என்னால் ஒரு கணமும் இருக்க இயலாது என்று தோன்றுகிறது!...' என்று விம்மினாள் பிரியவாதினி.
‘ நானும் உன்னை விட்டு பிரிய விரும்பவே இல்லை. இப்போது நீ எனக்கு விடை கொடு, விரைவில் நான் திரும்பி வருகிறேன்' என்றான் குணசேனன்.

‘சிசிரருது' முடிந்து ‘வசந்தருது'
தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் மாலைவேலையில் பிரியவாதினி ராஜபாட்டையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள்! இரண்டு மாதங்கள் ஆகியும் குணசேனனைக் காணவில்லை! குணசேனனின் நண்பன் வித்யாதரனும் அனுமதி பெற்று ஸ்ரீபுரம் போயிருந்தான்! இவர்களைப் பற்றிய விவரம் யாரிடம் கேட்பது என்று அவளுக்குப் புரியவில்லை!
இப்படிப்பல மாதங்களாகியும் குணசேனன் திரும்பி வரவில்லை. இந்த வருடம் வசந்த ருதுவின் தொடக்கத்தில் பல்லவச் சக்கரவர்த்தியிடமிருந்து மதங்க முனிவருக்கு ஓர் அழைப்போலை வந்தது. காஞ்சித் தலைநகரில் நடனக் கலை விழா ஏற்பாடாகியிருப்பதாகவும், மதங்க முனிவர் தன் நடன கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சக்ரவர்த்தி அழைப்பு விடுத்திருந்தார். வைகாசி மாதத் தொடக்கத்தில் சக்கரவர்த்தி தேர்கள் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
செய்தி கேட்டு பிரியவாதினி சற்றே தெளிவடைந்தாள்.
‘காஞ்சித்தலைநகருக்குப் போனால் அதற்கருகே உள்ள ஸ்ரீபுரத்தில் குணசேனனை சந்திக்க இயலுமல்லவா?, அப்படியே குணசேனனும் அந்த நடன நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பாரா?'
வைகாசி மாதத்தில் தேர்கள் வந்து விட்டன. காஞ்சிக்குக் கிளம்பும் முன் பிரியவாதினி ஆச்சார்யரை அடிபணிந்து ‘ஸ்வாமி! என்னுடைய அந்தரங்கத்தை தங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!... அந்த குணசேனன் இன்னும் திரும்பி வரவில்லை. அவரில்லாமல் என்னால் வாழ முடியாது என்றே தோன்றுகிறது!.. இப்போது நாம் செல்லும் போது ஸ்ரீபுரத்தில் அவரைப் பற்றி விசாரித்து வர தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விம்மினாள்'
‘பிரியவாதினி!.. நானே அதை மனதில் நினைத்திருக்கிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்!..' என்றார் மதங்க முனிவர்.
காஞ்சி அரண்மனையில் நடனக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மர் மதங்க முனிவருக்கும், அவருடைய சிஷ்யர்களுக்கும் எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார். அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் நன்றாக உபசரித்து, பணிவிடை செய்யக் காத்திருந்தார்கள்.
பிரியவாதினியின் மனம், எப்பொழுதும் ஸ்ரீபுரத்தில் உள்ள குணசேனனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
கலை நிகழ்ச்சிகள் தொடங்கிய முதல் நாள் பிரியவாதினி நடனமாடிய போது அவளுடைய கண்கள் மக்கள் கூட்டம் நிரம்பிய அந்த மண்டபத்திலும், மற்ற காஞ்சிநகர் கலைஞர்கள் மத்தியிலும் குணசேனனையே தேடி அலைந்தன. பத்து நாட்கள் நடந்த வசந்த விழாவிலே பத்துநாட்களும் சக்கரவர்த்தியும் பட்டமகிஷியும் சபையில் வந்தமர்ந்து நடனங்களை ரசித்தார்கள். பிரியவாதினிக்கு ஏக்கம் தான் மிஞ்சிற்று!
மதங்கர் இரண்டு சீடர்களை ஸ்ரீபுரத்திற்கு அனுப்பி குணசேனனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது.
இந்த விழாக்களின் கடைசிநாளில் மதங்க முனிவருக்கு பல்லவச் சக்கரவர்த்தி சன்மானங்கள் கொடுத்து விசேஷமாய் கௌரவித்ததோடு அவருடைய சிஷ்யர்கள் யாவருக்கும் தனித்தனியாக பரிசுப் பட்டாடைகளையும், பொற்கிழிகளையும் வழங்கினார். ஆனால் அப்போது பிரியவாதினியை மட்டும் காணவில்லை.
மதங்க தேவர் அரண்மனை விடுதிக்குத் திரும்பியதும் மிகவும் கவலையுற்றவராய் பிரியவாதினியைத் தேடி அழைத்து வருவதற்கு சீடர்களை அனுப்பினார்.
எங்கு தேடியும் பிரியவாதினி அகப்படவில்லை.
மறுநாள் காலை, மதங்க தேவர் விடுதியில் அனுஷ்டானங்களை முடித்து விட்டு தியானத்தில் இருந்த போது அரசாங்க அதிகாரி ஒருவர் வந்து அடிபணிந்து பல்லவச் சக்கரவர்த்தி ‘ காலை பத்து நாழிகைக்கு மேல் அங்கு வந்து ஆச்சார்யரை வணங்க விரும்புவதாக' தெரிவித்துக் கொண்டார்.
'அப்போது பிரியவாதினியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் உதவியை நாடலாமா?' என்று கூட முனிவருக்குத் தோன்றிற்று.
‘ஒருக்கால் இவள் ஸ்ரீபுரம் தனியாகப் போயிருப்பாளா?' அவருக்கும் பலவித மனக்கவலைகள் அலைமோதிக் கொண்டிருந்தன.
பத்துநாழிகைக்கு மேல் சக்கரவர்த்தி பரிவாரங்களுடன் விடுதிக்கு வருகை தந்தார்.
சக்கரவர்த்தியை மதங்க முனிவர் எதிர்கொண்டு வரவேற்று ‘ வர வேண்டும்.., வர வேண்டும்.. இந்த ஏழை தன்யனானேன்' என்று அழைத்து ஆசனத்தில் அமரச் செய்தார்.
பரிவாரங்களில் ஒருசிலர் பெரிய தந்தப்பேழைகளைக் கொண்டு வந்து முனிவரின் முன்னால் வைத்தார்கள்.
பிறகு சக்கரவர்த்தி ஒரு ‘சமிக்ஞை' மூலம் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, ஆசனத்தை விட்டு எழுந்து ‘தாங்கள் கருணை கூர்ந்து என் அழைப்பினை ஏற்று இங்கு வந்து இந்த விழாவை நடத்திக் கொடுத்தற்கு பல்லவ நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்.
தங்கள் குருகுலம் அமைந்த நந்திமலையில் ஒரு குடைவரைக் கோயில் அமைப்பதற்காக நூறு சிற்பிகளை இங்கிருந்து அனுப்பியிருக்கிறேன்! அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் தங்கள் குருகுலத்திற்கும் வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்திருக்கிறேன்..' என்று கூறிய சக்கரவர்த்தி, சட்டென்று பேச்சை நிறுத்தி, ‘ஆச்சார்ய தேவா!!.. தாங்கள் ஏதோ மனதில் தீவிரமாக விசனப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே!..' என்று வினவினார்.
மதங்கர் ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டு, ‘ சக்கரவர்த்தி... என்னுடைய பிரதம சிஷ்யையான ஒரு இளம் பெண்ணை நேற்று பிற்பகல் முதல் காணவில்லை. அவளைத் தேட தாங்கள் ஏற்பாடு செய்ய இயலுமா, இது என் வேண்டுகோள்!..' என்றார் மதங்கர்.
சக்கரவர்த்தி ஆசனத்தில் அமர்ந்து சில கணங்கள் மௌனமாக இருந்தார்.
அப்போது மதங்கர் மீண்டும் சொன்னார். ‘.. சில காலத்திற்கு முன் பல்லவ நாட்டைச் சேர்ந்த குணசேனன் என்னும் இளைஞன் என்னிடம் நடனமும், இசையும் சில காலம் பயின்றான். அவன் இங்கே அருகில் உள்ள ஸ்ரீபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். அவன் நடனத்திலும் இசையிலும் மிகவும் சமர்த்தனாக இருந்தான். அவன் என்னுடைய பிரதம சிஷ்யன் என்று சொல்வதற்கே பெருமைப்படுவேன். இந்தப் பெண் எனக்கு பிரதம சிஷ்யையாக இருந்தவள். இந்த இளம் பெண் அந்த வாலிபனை மனதால் மிகவும் விரும்பினாள்..
அந்த வாலிபன் ஒரு வருடத்திற்கு முன்னால் தன் தாய் தந்தையரை பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிப் போனவன் திரும்பி வரவேயில்லை. நானும் இந்தப் பெண்ணிற்காக சீடர்களை அனுப்பி ஸ்ரீ புரத்தில் குணசேனனைத் தேடிப் பார்க்க எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பலனில்லாமல் போய்விட்டது!..'
சக்கரவர்த்தி ஒருகணம் மௌனமாக இருந்து விட்டு, ‘நேற்று சன்மானம் வாங்கிக் கொள்ளாமல் போன பெண் அவள் தானா?..' என்று வினவினார்.
‘ஆமாம், பிரபு!'
‘.. ஆச்சார்ய தேவா! அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கிடைத்து விட்டன. அவளைத் தாங்கள் இனித் தேடிப் பயனில்லை!..'
‘பிரபோ!.. அது என்ன?'
‘.. ஆமாம்.. அந்தப் பெண் நேற்றுப் பிற்பகல் இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள புத்த விஹாரத்திற்குச் சென்று புத்த பிக்ஷுணி ஆகி விட்டாள்'
‘ஆஹா!.. அப்படியா? அவள் குணசேனனைக் காணாமல் மனமுடைந்து போய் விட்டாள் என்றே நினைக்கிறேன். எவ்வளவோ இடங்களில் நானும் குணசேனனை தேடிப் பார்த்தேன்!..'
சக்கரவர்த்தி ஒரு கணம் ஆசனத்திலிருந்து எழுந்து தன் சிரசிலிருந்து மணி மகுடம் எடுத்து மதங்க தேவரின் திருவடியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்.
‘ஆச்சார்ய தேவா!.. இந்த குணசேனனை எங்கெல்லாம் தேடினீர்கள்?.. என்னை மன்னித்து அருள வேண்டும். நான் அந்தப் பெண்ணிற்கு எவ்விதத் தீங்கும் செய்துவிடவில்லை...'
மதங்கர், சக்கரவர்த்தியை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ந்தவராக ‘குணசேனா!.. சக்கரவர்த்தியா!?.. தாங்களா?!..' என்று பதறினார்.
‘இந்த ஏழைதான் தங்கள் சிஷ்யன் குணசேனன். இதோ இந்த தந்தப்பேழையில் ஓலைச்சுவடியில் நானே எழுதி வைத்த தங்கள் அமர இலக்கியம் ‘பிருஹத்தேசி' இருக்கிறது. இதுவே இந்த எளியவனுடைய காணிக்கை. அந்தப் பெண் இயற்றிய தமிழ்ச் செய்யுளை நந்தி மலை குடைவரைக் கோயிலில் கல்வெட்டுக்களாகப் பதிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்தப் பேழையில் நானே உருவாக்கிய ஒரு புதியதோர் யாழ் இருக்கிறது! இந்த யாழ், அவளுடைய யோசனையின் பேரில் தாங்கள் விவரித்த சுத்த, சாயலக, சங்கீர்ண ராகங்களை நன்றாக மீட்டக் கூடியது.'
‘சக்கரவர்த்தி! எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்க அந்தக் கலையரசி என் கைவிட்டு போய் விட்டாள் என்று நினைக்கும் போது...'
'புத்த, ஜைன மதங்கள் வாழ்க்கையைத் துறப்பதால் மோட்சத்தை அடைய முடியும் என்று மோட்சத்திற்கு தான் வழிகாட்டுகின்றன. வாழும் தர்மங்களை விவரித்து, சிறப்பாக வாழ்ந்து மோட்சத்தை அடைய அவை வழி சொல்லவில்லை!.. ஒரு மாபெரும் கலையரசியை இந்த மதம் விழுங்கி விட்டது... அந்த மதங்களை வேரோடு களைவதிலேயே நான் என் வாழ்நாள் முழுவதையும் செலவிடுவேன்..'
மதங்கர் அதிர்ந்து போய் நின்றார்!
‘இந்த யாழின் பெயர்..' என்று சற்று நிறுத்தினார் சக்கரவர்த்தி.
‘பெயர்?..'
‘இதன் பெயர்.. பிரியவாதினி!'.. என்று சொன்ன சக்கரவர்த்தியின் கண்கள் நீர்ச்சுனைகளாய் நிரம்பி இருந்தன.
ஆசிரியர் குறிப்பு:
நந்திமலை என்று கதையில் குறிப்பிட்டது பிற்காலத்தில் குடுமியான்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கே மகேந்திரபல்லவன் ஆணையின் பெயரில் ஒரு குடைவரைக் கோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கோவிலில் இசைக் கல்தூண்கள் ஏழு சுரங்களை வாசிக்கக் கூடிய அளவில் உள்ளன. இது உலகப் பிரசித்தி பெற்றது.
இந்த மலைச்சாரலின் தென்பகுதியில் உள்ள ஒரு பாறைக் கல்வெட்டில், முப்பத்தெட்டு வரிகளில் ஒரு செய்யுள் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வரியில் 64 எழுத்துகள் இருக்கின்றன. 64 எழுத்துகளிலும் இசை, இலக்கணக் குறியீடுகள் காணப்படுகின்றன.
இந்தக் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரே பாறை மேல் ஒரு ஆசானும், அருகே ஒரு கமண்டலமும் சிற்பங்களாக உள்ளன.
நமது நாட்டு இசை மரபில் நடனத்தோடு இணைந்தது இசையாகும். இசை தனியாகப் பாடப்பட்டதில்லை.
ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மதங்கர் எழுதிய 'பிரஹத்தேசி' என்னும் வடமொழி நூல் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திற்குப் பிறகு ஒரு முக்கியமான இசை, இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இந்நூல் இப்பொழுது முழுமையாகக் கிடைக்கவில்லை.
மகேந்திரவர்மன், ருத்ராச்சாரியாரிடம் இசை பயின்றவன். அவனுக்கு குணசேனன் என்ற பெயரும் உண்டு. இவன் உருவாக்கிய புதிய யாழின் பெயர் 'பரிவாதினி' என்று சொல்லப்படுகிறது.
'பரிவாதினி' என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் சரியாக வரவில்லை. அது பிரியவாதினியாகவே இருக்கக் கூடும்.
வடமொழியில் வல்லவனான மகேந்திரவர்மன் முதலில் ஜைன மதத்தில் இருந்து பிறகு சைவ மதத்தைத் தழுவியதாக வரலாறு. இவன் எழுதிய வடமொழி நாடகம் ‘மத்தவிலாசம்' புத்த, ஜைன மதங்களின் குறைபாடுகளை கேலி செய்வதாக காணப்படுகிறது.
(முற்றும்)
நன்றி : இந்தக் கதையை இணையத்தில் பதிப்பிக்க அனுமதி தந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
No comments:
Post a Comment