உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !
கம்போடியாவில் உள்ள "அன்க்கோவர் வாட்" கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை.
ஆனால், 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft).
ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது.
இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !
ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை
பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான்.
மன்னனின் தவக்கனல் சத்தியலோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான்.
பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார்.
இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், விபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார்.
காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை.
தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது.
தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.
No comments:
Post a Comment