*8.திருக்கடவூர் :
மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த ஸ்தலம்.
திருமந்திரம்
மூலத்துவாரத்து மூளும்
ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற
நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி
யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே .
மார்க்கண்டேயனின் உயிரை வாங்க வந்த யமன் பாசக்கயிற்றால், மார்க்கண்டேயனையும் அவன் தழுவியிருந்த லிங்கத்தையும் சேர்த்துக் கட்டியிழுத்தான்; சிவபெருமான் இடதுகாலால் யமனை உதைத்து, சங்காரம் செய்தார் என்பது விரிவாகவே பரவியிருக்கிறது. அதனால், கதையை விவ ரிக்காமல், யோகத்தைப் பற்றிக் கூறுகிறார்
இப்பாடலில்.
காலனை சங்காரம் செய்து, கால சங்கார மூர்த்தி என சிவபெருமான் திருநாமம் பெற்ற, திருக்கடவூரில் இருக்கும் ஒரு யோகியைப் போல, சிவபெருமானை வைத்துச் சிலேடையாகச்
சொல்லும் பாடல் இது.
‘மூலாதாரத்து மூண்டெழு கனலை’ என ஔவையார் விநாயகர் அகவலில் கூறியதைப்போல, மூலாதாரத்தில், தலையை வைத்துக் கீழ்நோக்கித் துயிலும் குண்டலினியை எழுப்பி, ஒவ்வோர் ஆதாரமாகக் கடந்து ஸஹஸ்ராரத்தில் (தலை உச்சியில்) நிலை நிறுத்த வல்ல யோகிகள், யமனைத் தடுப்பார்கள்.
இவ்வாறு யமசங்காரத்தைச் சிவபெருமான் நிகழ்த்திய இடம் திருக்கடவூர் எனத் திருமூலரே கூறிப்பதிவு செய்கிறார். அடுத்து, எல்லா ஜீவராசிகளையும் ஆட்டிப் படைக்கும் மன்மதனைப் பற்றிக் கூறுகிறார் திருமூலர்.
அளவு கடந்த பக்தி இருந்தால் அந்த இறைவனே இறங்கி வந்து உதவி செய்வார் என்பதை வலியுறுத்தும் கதைதான் மார்க்கண்டேயர் வரலாறு.
இன்றைய திருக்கடைïருக்கு அருகே அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மனைவியுடன் வாழ்ந்து வந்த மிருகண்டு என்ற மகரிஷி கடும் தவம் செய்து, இறைவன் அருளால் பெற்ற குழந்தைதான் இந்த மார்க்கண்டேயர்.
அவருக்கு குழந்தை வரத்தை கொடுத்த சிவபெருமான், ஒரு நிபந்தனையையும் கூடவே விதித்தார்.
"குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா?'' என்பதுதான் அந்த நிபந்தனை.
முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், "நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர்வாழும்'' என்று அருளிவிட்டு மறைந்தார்.
சிவபெருமான் அருளிய வரத்தினால் பிறந்ததாலோ என்னவோ, அவர்மீது மிகுந்த பற்றுகொண்டு வளர்ந்தான் மார்க்கண்டேயன். தினமும் திருக்கடைïர் வந்து, அங்கு அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானை தொழுது வந்தான்.
நாட்கள் வேகமாக ஓடின. மார்க்கண்டேயன் வாலிப வயதை அடைந்தான்.
அதுவரை மகனின் திறமையை பார்த்து வியந்து வந்த மிருகண்டு தம்பதியர், அவனது ஆயுள் முடியப்போகிறதே... என்று வருந்தினர். உண்மையை அறிந்த மார்க்கண்டேயன், பெற்றோரின் இந்த நிலையைக் காண சகிக்க முடியாமல் தனது 15 வயதிலேயே ஒவ்வொரு சிவ ஸ்தலமாக சென்று 108 சிவ ஸ்தலங்களை தரிசிக்க எண்ணினான். அதன்படி 107 சிவ ஸ்தலங்களில் வழிபட்டுவிட்டு இறுதியாக தனது 16 வயதில் திருக்கடைïர் வந்தான்.
"அமிர்தகடேஸ்வரரே... நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்று, அந்த சிவலிங்கம் முன்பு விழுந்து வணங்கி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான்.
அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்து விட்டான். தனது தவத்தின் வலிமையால் அவனால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே அமிர்தகடேஸ்வரரை கட்டியணைத்துக் கொண்டான்.
எமனும் தன் பாசக்கயிற்றை வீசினான். அது சிவலிங்கத்தின் மீதும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை.
தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கம் பிளந்து வெளியே வந்தார்.
"காலனே... எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறாய்?'' கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, `கால சம்ஹாரமூர்த்தி' ஆனார்.
தொடர்ந்து, மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, "என்றும் பதினாறாக இருக்கக் கடவாய்'' என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.
இதற்கிடையில், எமன் இறந்ததால் உயிர்கள் பல்கிப் பெருகின. பூமியின் பாரம் அதிகரித்தது. பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. "இறப்பே இல்லாமல் இருந்தால் எனக்குச் சுமை அதிகமாகும். ஆகையால் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்'' என்று அவள் இறைவனிடம் வேண்டினாள்.
சிவபெருமானும் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஒரு நிபந்தனையும் விதித்தார்.
"யார் என்னிடத்தில் மிக பக்தியாக உள்ளார்களோ அவர்களை வதைக்காதே!'' என்பதுதான் அந்த நிபந்தனை.
இதனால்தான் நீண்ட ஆயுள் வேண்டி திருக்கடைïர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்
No comments:
Post a Comment