Thursday, 5 January 2017

அட்ட வீரட்டானம் *1.திருக்கண்டியூர்

1.திருக்கண்டியூர்  : சிவபிரான் பிரம்மனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த ஸ்தலம்.


பிரமகத்தி தோஷம் நீங்கும் ஸ்தலம்

திருமந்திரம்
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே. 


பொழிப்புரை :

ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட்கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், 



தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திருமாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 

தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.


அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர்.-613 202. தஞ்சாவூர் மாவட்டம்.

திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்



இவ்வீரச் செயலைக் குறிப்பது திருக்கண்டியூர் வீரட்டம்.



ஒருமுறை பிரமனும் மாலும் மகாமேரு மலையின் சிகரம் ஒன்றில் சேர்ந்திருந்தபொழுது தேவர், முனிவர் முதலிய பலரும் அங்கு வந்து அவரை வணங்கி, `நீவிர் எங்களைப் படைத்துக்காக்கும் தலைவராதலின், அனைத்துலகிற்கும் முதல்வனாய், உயிர்க்குயிராய் நிற்கும் முதற்கடவுள் யாவன் என்னும் ஐயத்தினையும் நீக்கி உண்மையை உணர்த்தல் வேண்டும்` என வேண்டினர்.



 அதுபொழுது பிரமனும், மாயோனும் தம் அதிகாரச் செருக்கால் மயங்கித் தாங்களே முதற்கடவுளாகத் தனித்தனிக் கூறி வாதிட்டனர். வேதங்களும், மந்திரங்களும் உருவாய் வெளிப்பட்டு, `நும்மில் ஒருவரும் முதல்வரல்லீர்; சிவபெருமானே அனைத்துயிர்க்கும் முதல்வன்` 



எனக் கூறவும் தெளிவு பெறாது வாதிட்டனர். அதனால், சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளியாய்த் தோன்றி, அதினின்றும் உமையொருபாகனாய் வெளிப்பட, திருமால் தெளிந்து அச்சுற்று, `எம் தந்தையே, பிழைபொறுத்தருள்க` என வணங்கினார். ஆயினும், பிரமன் செருக்கு நீங்காதவனாய், அன்று ஐந்து தலைகளோடு இருந்த அவன், தனது உச்சித் தலை வாயினால், `

என் மகனே, வருக` என்று அழைத்து இகழ்ந்தான். 

அதனால், சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி `நம்மை இகழ்ந்து பேசிய இப் பிரமனது நடுத்தலையைக் கிள்ளிக்கொண்டு, இப்பிரமனே யன்றிச் செருக்கால் மயங்கி நம்மை இகழ்ந்து நிற்போர் யாவராயினும் அவர்தம் உதிரத்தைப் பிச்சையாகப் பிரம கபாலத்தில் ஏற்று, அவரது செருக்கை நீக்கித் தெளிவுபெறச் செய்க` என்று அருளிச் செய்து மறைந்தார்.



 திருமாலும் தம் உலகை அடைந்தார். வைரவக் கடவுள் அவ்வாறே தமது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்த உடன் அவனது உதிரம் உலகை அழிக்கும் வெள்ளம்போல் பெருக, அவன் நினைவிழந்து வீழ்ந்தான். 

பின்பு வைரவக் கடவுள், தமது நெற்றிக் கண்ணால் உதிர வெள்ளத்தை வற்றச் செய்து, பிரமனையும் உயிர்ப்பிக்க, அவன் நல்லறிவு பெற்று வணங்கிப் பிழைபொறுக்க வேண்டினான். 

அப்பால் வைரவக் கடவுள் அவனை மன்னித்து, அவனை என்றும் நான்முகனாகவே இருக்கச் செய்து, தாம் ஏந்திய பிரம கபாலத்துடன் தேவர், முனிவர் முதலான வர்களில் செருக்குக் கொண்டவர்பால் சென்று, `எனது கபாலம் நிறைய உங்கள் உதிரத்தைத் தாருங்கள்` என்று கேட்க, அவர்கள் அனைவரும் அச்சத்தால், ஏற்ற பெற்றியில் தம் தம் உடம்பினின்றும் இரத்தத்தைப் பிரம கபாலத்தில் சொரிந்து சோர்வுறலாயினர். 

பின்பு வைரவக் கடவுள் அவர்களுக்கும் உயிர்ப்பிச்சை தந்து தெளிவை உண்டாக்கி, வைகுந்தம் சென்று, அங்குத் தம்மைத் தடுத்த சேனா முதலியாகிய விடுவச் சேனனைச் சூலத்தின்மேல் கோத்தெடுத்துக் கொண்டு செல்லத் திருமால் இதனை அறிந்து எதிர்வந்து வணங்கி, 

`எந்தையே நீ வேண்டுவது யாது` 

என, வைரவக் கடவுள், `உன் கபாலத்தின் வழி யாக எனது பிரம கபாலம் நிறைய உதிரம் தரல் வேண்டும்` என்றார். திருமால் தாமே தமது நகத்தால் தம் நெற்றியி னின்றும் ஒரு நரம்பைப் பிடுங்கிப் பிரம கபாலத்தில் விட, அது வழியாக உதிரம் பல்லாண்டு காறும் ஒழுகிற்று. 

திருமால் நினைவிழந்து வீழ்ந்தார். ஆயினும், வைர வரது கைக் கபாலம் பாதியாயினும் நிறைந்ததில்லை. 

அதனைக் கண்ட `சீதேவி, பூதேவி` என்னும் இருவரும் நடுக்கங் கொள்ள, வைரவக் கடவுள் அவர்கள்மீது இரக்கம் வைத்துத் திருமாலை உயிர்ப்பித்துத் தந்து, விடுவச் சேனனையும் சூலத்தினின்றும் இறக்கிவிட்டுச் சிவபெரு மான் முன்பே தமக்காகப் படைத்துக் கொடுத்த கணங்களுடன் தமது புவனத்தில் தங்கி, அண்டங்கள் பல வற்றைக் காத்து வருவாராயினார். இவ்வாறு கந்த புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் இவ்வரலாறு விரித்துப் பேசப்படுதல் காண்க.



``அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற (பின்) அச்சுதனை உதிரங் கொண்டான்`` என்றதனால், `செல்வம், அதிகாரம்` முதலியவற்றால் எழும் செருக்குக் காரணமாக முதல்வனாகிய கடவுளை மறந்து `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கித் திரிவாரை அம்முதல்வனது திருவருள் ஒறுத்து அடக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தவே இவ்வரலாற்றைப் புராணங்கள் வலியுறுத்துகின்றன என்பது உணர்த்துதல் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் பெறப்படும். தக்கன் வரலாறு, என்றும் செருக்குடை யராய் இருப்பவரை ஒறுத்தலையும், இஃது, ஓரோவழிச் செருக்குறு வாரை ஒறுத்தலையும் குறிக்கும். இவையே இவற்றிடை உள்ள வேற்றுமை.

இதனால், பிரமனது தலையை அரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.

மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை;



திருக்கரம்பனூரிலும், திருக்குறுங்குடியிலும் கூறப்படும் தல புராணமே, இங்கும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடமும், பெருமாளிடமும் அவ்வோட்டில் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும், அதனாலேயே தலப்பெருமாள் (சிவபெருமானின் சாபத்தையே நீக்கியதால்!) ஹர சாப விமோசனப் பெருமாள் என்று திருநாமம் பெற்றதாகவும் தலபுராணம் சொல்கிறது.



இவ்வைணவ திருக்கோயில் இரண்டு பிரகாரங்களுடன் விஸ்தாரமாக காணப்படுகிறது. இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது. பிரம்மோத்சவம் பங்குனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமங்கையாழ்வார் மட்டும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரே ஒரு பாசுரத்தில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்:

பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)



பிரம்மனின் (பிடுங்கப்பட்ட ஐந்தாவது தலையின்) ஓட்டை கையில் ஏந்தி, பிட்சை பெற்று உண்ட சிவபெருமானுக்கு சாப விமோசனம் அளித்தவன், உலகம் போற்றும் திருக்கண்டியூரில் அருள் பாலிக்கிறான். திருவரங்கம், திருமெய்யம், திருக்கடல் மல்லை ஆகிய தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் அப்பிரானை வணங்கி, அவன் திருவடி பற்றி உய்வு பெறுவதை விடுத்து நமக்கு வேறு வழியில்லை !




























No comments: