Tuesday, 10 January 2017

அட்ட வீரட்டானம் *4.திருப்பறியலூர்

*4.திருப்பறியலூர் (கீழப்பரசலூர்) : தக்கன் தலையைத் கொய்த ஸ்தலம்.

Copy and Paste the Below Link to Google MAPS and find the location .

NCN026-Korukkai Veeratteswarar Temple, Korukkai, Tamil Nadu, India

திருமந்திரம்
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

தக்ஷன் வரலாறு


திருத்தல இருப்பிடம் : 

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் செம்பொனார் கோயில் ரயில்நிலையத்திலிருந்து தென்மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது 'பரசலூர்' என வழங்கப்படுகிறது.

திருத்தலச் சிறப்புகள்: 


இது எட்டு வீரட்டத் தலங்களுள் தக்ஷனை அழித்த தலம். தக்ஷனின் ஆணவத்தை அடக்கி தண்டித்த இறைவனின் சொரூபத்தை வழிபடும் தலம் இது. இந்த வீரச்செயலைச் செய்த ஈசன் தக்ஷனின் சிவநிந்தனைக்குத் தக்க தண்டனை கொடுத்தார். ஏட்டுக்கரம் கொண்ட வீரபத்திரர் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தென்கரைத் தலம். சம்பந்தர் பதினோரு பாடல்களைக் கொண்ட தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.


மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும்.திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும். மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்; மூலவளின்பெயர்:இளங்கொம்பனையாள்


பெயர் காரணம் : 

தக்கன் வேள்வி செய்த தலமாதலின் 'தட்சபுரம்' என்றும், தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் 'பறியலூர்' என்றும், பெயர்களுண்டு.


புராண வரலாறு : 

பிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தக்ஷன் தவமிருந்து வானவர்களும், தானவர்களும் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களையும் ஆட்டி படைத்தான். உமையம்மையைத் தனது புத்திரியாக அடைந்து, சிவ பெருமானுக்குத் திருமணமும் செய்து கொடுத்தான். இருந்தும் தக்ஷன் ஈசனுடன் பகைமை பாராட்டினான்.



 ஈசனை அவமானப்படுத்துவதற்காக வேண்டி யாகம் ஒன்றைத் துவங்கினான். அந்த வேள்விக்கு ஈசன் ஈசுவரியைத் தவிர, மற்ற அனைவர்களுக்கும் அழைப்பு விடுத்தான். தக்ஷனின் இந்த ஆணவப்போக்கை ததீசி முனிவர் வன்மையாகக் கண்டித்தார். உமையாள்  தந்தையிடம் வாதிட்டாள். தக்ஷன் உமையவள் வாதத்தை ஏற்கவில்லை. தக்ஷனின் அவமதிப்பால் அன்னை அக்னி பிரவேசம் செய்து கொண்டார். ஈசன் சினம் கொண்டார். சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திரர் தக்ஷனின் தலையைக் கொய்து யாகத்தையும் அழித்தார்.

கோயில் அமைப்பு : 

மேற்கு நோக்கி அமைந்துள்ள பழமையான கோவில். இரண்டு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலிற்கு இராஜகோபுரம் இல்லை. மதிற்சுவர்க்கும், இரண்டாவது திருச்சுற்றுக்கும் இடையில் கருவறையை நோக்கி நந்தியும், பலிபீடமும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று முகப்புடன் அமைந்துள்ளது. 


உள் திருச்சுற்றின் வாயிலுக்கு வலப்புறம் விநாயகரும், பாலசுப்பிரமணியரும் இடப்புறம் சமயகுரவர்கள் நால்வரும் காட்சியளிக்கின்றனர். திருச்சுற்றின் வடபுறம் சண்டிகேசுவரர் திருமுன் உள்ளது. கீழ்புறம் பைரவர் மற்றும் சூரியன் உள்ளனர். கருவறையின் வெளிச்சுவர் புரைகளில் நான்முகன், கொற்றவை, லிங்கோற்பவர், ஆலமர்செல்வன், கணபதி, சிவலிங்கத்தைப் வழிபடும் தக்கன் ஆகியோர் அமைக்கப்பட்டு உள்ளனர்.


கருவறை யாளி வரிசை வரை கருங்கல்லால் கட்டப்பட்டு, அதற்குமேல் செங்கல்லால் அமைந்துள்ளது. வட்ட வடிவிலான விமானத்தில் துணைவியருடன் நான்முகனும், துணைவியருடன் முருகனும் மற்றும் ஆலமர்செல்வனும் உள்ளனர். கருவறையில் லிங்கத் திருவுருவில் வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு முன் மகாமண்டபமும், முகமண்டபமும் அமைந்துள்ளன.


முகமண்டபத்தில் அம்மன் திருமுன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நாற்கரங்களோடு விளங்கும் அன்னையின் திருப்பெயர் இளங்கொம்பனையாள் என்பதாகும். மண்டபத்தில் திருவுலாத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மயில் மேல் காலூன்றி நிற்கும் முருகன், சிவனுமைமுருகு, விநாயகர், பிரதோச நாயகர் ஆகியோரின் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி தக்கனை வதம் செய்த மூர்த்தியான வீரபத்திரரின் செப்புத் திருமேனி உள்ளது. எதிரில் சாளர வாயில் உள்ளது. இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் இல்லை. சூரியன் மட்டுமே உள்ளார். இங்கு பைரவருக்கு அர்த்தசாமவழிபாடு நடத்தப்படுகிறது.








திருப்பறியலூர் வீரட்டேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு ஆணவம் குறையும்;நாத்திக இருள் மறையும்;ஞான ஓளி பிறக்கும்;பக்தி பெருகும்;பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.

இந்த கோவிலை Google Earth ல் பார்த்தால் யாக குண்டம் போன்று தெரியும்.

இந்த கோவிலுக்கு நான் சென்று வந்து உள்ளேன்.

No comments: