Wednesday, 11 January 2017

அட்ட வீரட்டானம் *6.திருவழுவூர்

*6. திருவழுவூர்   : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்



திருமந்திரம்

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தியுரி அரனாவது அறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயனுள்ளெழுந்தன்று கொலையே .

இப்பாடலின் அடிப்படை? ‘நல்லது செய்தால் நல்லது வரும்; கெட்டது செய்தால் கெட்டது வரும். இதில் கடவுள் எதற்கு?’ என்ற கொள்கை உடைய  முனிவர்கள் சிலர் இருந்தார்கள். அதாவது, நாம் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறோம். செய்யும் வேலைக்கு  ஊதியம் வருகிறது. வேலை செய்ய வில்லையென்றால், ஊதியம் வராது. இதில் முதலாளி என்பவர் எதற்காக என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அந்த முனிவர்களும்! அவர்களைக்  கர்ம மார்க்கக்காரர்கள் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட அவர்கள் மிகுந்த செருக்கோடு, ஒரு யாகம் செய்யத் தொடங்கினார்கள்.




அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல! ஆகவனீயம், தட்சிணாக்கினீயம், காருக பத்தியம் என்று சொல்லக்கூடிய மூன்று விதமான ‘தீ’ வளர்த்து யாகம்  செய்யக் கூடியவர்கள். யாராக இருந்தால் என்ன? அவர்களுக்கெல்லாம் ஆணவம் வராது என்று எழுதியா வைத்திருக்கிறது? அவர்களின் ஆணவத்தை  ஒழித்து, அவர்களுக்கு அறிவு புகட்டுவதற்காக, சிவபெருமான் வந்தார். அப்போது, முனிவர்கள் நடத்திய யாகத்தில் இருந்து, அவர்களின் ஆணவமெல்லாம் உருண்டு திரண்டு வந்ததைப்போல, ஒரு யானை வெளிவந்தது.  

அந்த யானையை சிவபெருமான் மீது ஏவினார்கள். தன்னைக் கொல்ல வந்த யானையை, சிவபெருமான் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த் துக் கொண்டார். ஆணவமும் சினமும் கொண்ட முனிவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. அவர்கள் செய்யும் யாகத்தில், ஆதியும் அந்தமும் இல்லாத  அரும்பெரும் ஜோதியான சிவபெருமானே வெளிப்பட்டு, ஒளிவெள்ளமாய் அருள்புரிகின்றார் என்பதை, அந்த முனிவர்கள் அறியவில்லையே என்கிறார்  திருமூலர்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது.

இந்த நிறுத்தத்தில் இறங்கி,சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம்;

இவ்வ்வளவு பெரிய்ய்ய்ய கோவிலாக இருந்தும் கூட ஒரு நாளுக்கு பத்து பக்தர்கள் வருவதே அதிகம் போலும்!அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமிநாட்களில் உள்ளூர் பக்தர்கள் ஓரளவு கணிசமாக வருவதாகக் கேள்வி!! சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான்;இதுதான்;இதே தான்!!! ஆமாம்! ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.

தல வரலாறு:

தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர். .

அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.


முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். 


முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர்.

பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள்.
பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். 


யானையை சம்ஹாரம் செய்தவர் என்பதால் இறைவன் "கஜசம்ஹாரமூர்த்தி' எனப்படுகிறார். 

இத்தலத்தின் விசேஷ மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.

திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். 


அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.
கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும்.



சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.



சனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப் போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். 


சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலபெருமை:


இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார். சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும்.


கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும். யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார்.




48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீசுவரனுக்கு தனி சன்னதி உள்ளது. 




இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம். தீர்த்தங்களில் சுவாமி சன்னதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது




No comments: