Tuesday, 17 January 2017

சிவபெருமான் சித்தர்- சித்து விளையாட்டு-1

திருச்சிற்றம்பலம்.


இரும்பு பித்தளையை பொன்னாக்கிய ரசவாத சித்தர் சிவபெருமான்.

பாண்டிய நாட்டில் திருப்பூவனம் என்ற ஊரில், சிவபெருமான் மீது பேரன்பு கொண்ட, ஒழுக்கமும் அறநெறியும் கொண்ட நாட்டிய மங்கையொருத்தி பொன்னையாள் தினமும் கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி, இறைவன் முன்பு நாட்டியமாடி நடனாஞ்சலி செலுத்தி, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து வந்தாள்.

ஓர் நாள் நாட்டியமாடும் போது சிவபெருமானையே உற்று நோக்கியவளுக்கு, இந்த சிவபெருமான் முழுவதும் சொக்கத் தங்க திருமேனியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டாள். ஆனால், தன்னிடம் அவ்வளவு செல்வம் இல்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.
அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதில் தான் சிவபெருமானுக்கு எத்தனை ஆனந்தம் ? முழுநீறு பூசிய மேனியும், செம்பவளச் சடாமுடியும், எளிய உடையும், கட்டுவாங்கம் பிடித்த திருக்கரமும் யோகபட்டமும், விபூதிப்பையினோடும் சித்தர் வேடமிட்டு அமுது செய்யும் அடியார்களோடு சிவபெருமான் பொன்னையாளின் வீட்டிற்கு எழுந்தருளினார். 
எல்லா அடியவர்களும் அமுதுண்டு சென்ற பின்னர், பொன்னையாளின் முகத்திலிருக்கும் மனக்குறையை கேட்டார். அவளும் தன் குறையை சுவாமியிடம் கூறினாள். வீட்டில் இருக்கும் செம்பு, இரும்பு, பித்தளை ஆகிய பாத்திரங்களை எடுத்து வரச் செய்து அதன் மீது திருநீறு தெளித்து இன்றிரவு தீயிலிட்டு எடுத்தால் பொன்னாகிவிடும் என்று அருளி மறைந்தார். 
அது போல் தீயிலிட்டு எடுத்தவுடம் பொன்னாக மின்னின. அதை வைத்து சிவபெருமானின் தங்க திருமேனியை செய்து பிரதிஷ்டை செய்தாள். அந்த திருமேனியின் அழகைக் கண்டு சொக்கி, அதன் கன்னத்தில் செல்லமாக கிள்ளி முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினாள். 
இந்த காட்சியை அப்படியே தத்ரூபமாக திருப்புவனம் கோவிலில் தூணில் செதுக்கி வைத்துள்ளனர். இந்த கோவிலுக்கு செல்பவர்கள் தவறாமல் இந்த திருவுருவைப் பார்க்கவும். பின்னர் சில காலம் வாழ்ந்து சிவத்தொண்டு புரிந்த பொன்னனையாள் முக்திபேறு பெற்றார்.
சிவபெருமானின் திருவிளையாடல்களில் இது இரசவாதம் செய்த படலம்.
இந்த தலம் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிறது. திருஞானசம்பந்த பெருமான் வழிபட வந்திருந்த போது, வைகை நதியில் ஆற்று மணல் யாவும் சிவலிங்கமாக தோன்ற, அதில் தம் கால் பதிக்க தயங்கி மறுகரையில் இருந்த படியே சுவாமி தரிசனம் செய்தார். இதற்காக சுவாமி நந்தியை விலகியிருக்க அருளினார்.

No comments: