Tuesday, 24 January 2017

ஆன்மீகத்தில் வரும் தடைகள்

ஆன்மீகத்தில் வரும் தடைகளும் தாண்டும் முறைகளும்...
ஜெபம் நிறைய செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் முடிவதில்லை.
இதற்குக் காரணம் என் கர்மவினைகளா?அல்லது, என் சிரத்தை போதவில்லையா?
நீங்கள் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும்போது குறிப்பிட்ட நிலையில் நிறையதடைகள் ஏற்படும். ஏனென்றால் அந்தப் பாதையில் பயணம் செய்ய உங்களுக்குத்தகுதி இருக்கிறதா என்று அந்த நெறிக்குரிய தேவதை உங்களை சோதிக்கும்.அதை சோதனை என்று பலரும் உணர மாட்டார்கள். உங்களுக்கொரு சோதனைவைக்கப்படும் போதுதான் அதில் நீங்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

உதாரணமாக, மாலை ஆறு மணிக்கு நீங்கள் ஜெபத்திற்கு அமருகிறீர்கள் என்றுவைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்கு உங்களை அமரவிடாமல் சிலவேலைகள் வரும். அல்லது உங்கள் கவனம் சிதறும்படி சில விஷயங்கள் நடக்கும்.

அந்த நேரத்தில் நீங்கள் உறுதியுடன் உங்கள் பயிற்சியை செய்கிறீர்கள்என்றால் அந்தப் பாதைக்கு நீங்கள் தகுதியானவர் என்று பொருள்.

உங்கள் பயிற்சியின் வீரியம் கூடக்கூட,இத்தகைய சோதனைகள் குறையத்
தொடங்கும்.நமக்கு இது வராது போலிருக்கிறதே என்று சிலர் தயங்குவார்கள்.
இது சோம்பல்தானே தவிர வேறொன்றுமில்லை. 
அதேநேரம் கர்மவினைதான் காரணமா என்ற கேள்வியே உங்களுக்குத்
தேவையில்லை.எல்லாவற்றுக்கும் கர்மவினை மீது பழியைப்
போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்வது எளிது.உங்களுக்குள் இருக்கும் சோம்பலுக்குக் காரணம்.

கர்மவினை என்ற எண்ணம் எழுந்தால் கூடவே இன்னொன்றையும் நீங்கள்
நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆன்மீகத் தேடல் கூட உங்கள்கர்மவினையின் பயன்தான். எனவே இதை மனதில் வைத்துக் கொண்டுஅடுத்த படிநிலை நோக்கி நகர வேண்டும்.திட்டமிட வேண்டும். உறுதியுடன்இடைவிடாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆன்மீகத்தில் சிலர் சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுத்து விடுவார்கள்.
"குரு இருக்கிறார்! அவர் பார்த்துக் கொள்வார்' என்ற எண்ணம் முழுமையான
சரணாகதியில் வந்தால் அதன் தன்மையே வேறு. மாறாக, குரு பார்த்துக்
கொள்வார் என்று சோம்பலின் அடிப்படையில் விட்டுவிட்டால் நீங்கள்
செய்ய வேண்டிய பயிற்சியை உங்கள் குரு செய்வார் என்று நீங்கள்
எதிர்பார்ப்பதாகப் பொருள்.
குருவுக்கோ உங்கள் இஷ்டதெய்வத்துக்கோ 
உங்களை முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கைகளில் ஒரு கருவியாக
ஒரு பாத்திரமாக நீங்கள் மாறினால் அதன் பெயர்தான் சரணாகதி.

நான் என்னை என் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி என் வேலையை
நான் பார்ப்பேன்,அவர் வேலை என்னைப் பார்த்துக் கொள்வது என்பது
சரணாகதியல்ல. அது சோம்பேறித்தனம்.

இப்போது நாம் பார்த்தவை புறத்தில் நமக்குத் தெரிகிற தடைகள்.ஆன்மீகப்
பயிற்சிக்கு இடையூறு வருவது, தள்ளிப்போட நேர்வது என்பவை எல்லாம் புறத்தடைகள்.இது போக சாதகரின் உள்நிலையிலேயே சில தடைகள் இருக்கும்.தங்கள் எண்ணங்களின் போக்கை கூர்ந்து கவனித்து சீர்செய்து கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அந்தத் தடையிலேயே அந்த சாதகர் பல வருடங்கள் கூட இருப்பார்.
தன் உணர்வுகளை உற்றுப் பார்த்து,இதிலிருந்து விடுபட வேண்டுமென்னும்
தவிப்பு ஒரு சாதகருக்கு வந்து,அந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டால்
அந்த இடத்தில் குருவால் உதவ முடியும்.கைகொடுத்துத் தூக்கிவிட முடியும்.
ஆனால் தடை ஏற்பட்டது கூடத் தெரியாமல் தேங்கிப் போய் விட்டால் அதிலிருந்து மீள நெடுங்காலமாகும். இது எப்படிப்பட்ட நிலையென்றால்,
உங்களுக்கு உருவாகியிருப்பது ஒரு தடை என்றே தெரியாது.அந்தத் தடையை
மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள். அப்படி உணரும்போது அதைத் தாண்டி
வரத் தோன்றாது.
உதாரணமாக காபி குடிக்கிற பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகி காபி குடிக்க
மிகவும் பிடித்திருந்தால் அது ஒரு தடை என்றே உணர மாட்டீர்கள்.மிகவும்
சௌகரியமாக உணர்வீர்கள்.
அங்கேயே தடைப்பட்டு நின்று விடுவீர்கள்.தானாக ஒரு பொறி வந்து,ஓர் உந்துதல் வந்து ஒரு முயற்சி வந்து மீண்டால் உண்டு.இது ஏறக்குறைய கோமாவில் கிடந்து மீள்வதைப் போலத்தான். 
இத்தனைநாள்என்ன செய்து கொண்டிருந்தோம் என்றே தோன்றாது.
எனவே கர்மவினை மீதுபழிபோடாதீர்கள். இப்போது நீங்கள் செய்யும் செயல்தான் பத்து வருடங்கள்கழித்து,இருபது வருடங்கள் கழித்து நீங்கள் என்னவாக ஆவீர்கள் என்பதைநிர்ணயிக்கும்.
எனவே இடைவிடாமல் பயிற்சிகளை செய்வதன் மூலமும் தன்க்குள் நிகழ்வதை உற்று கவனித்து சீர்செய்து கொள்வதன் மூலமும் ஆன்மீகப் பாதையில்தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள்...
...ஓம் நம சிவாய...

சிவபெருமான் அமர்ந்த மலை




வெள்ளியங்கிரி மலை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.
இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.
இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.
மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.
இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர்.
கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்
சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது. 


மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.
சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.

1.முதல் மலை          :பிரணவ சொரூபம் வெள்ளிவிநாயகர் உறைவிடம்.
2.இரண்டாம் மலை :சுவாதிஷ்டானம் பாம்பாட்டிச் சுனை.
3.மூன்றாம் மலை    :மணிப்பூரகம் அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை.
4.நான்காம் மலை    :அநாகதம் ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்.
5.ஐந்தாம் மலை       : விசுக்தி நிலை பீமன் களியுருண்டை மலை.
6.ஆறாம் மலை        :ஆக்ஞை நிலை சேத்திழைக்குகை, ஆண்டி சுனை.
7.ஏழாவது மலை     :சஹஸ்ரஹாரம் சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி
ஆண்டவர்)
பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.
திருச்சிற்றம்பலம்

Friday, 20 January 2017

சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்து அருளல்.


நாரைக்கு முக்தி  கொடுத்தவர் மதுரை  சொக்கநாதப்பெருமான்

புராண வரலாறு -


பாண்டியநாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தடாகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது. ஒரு சமயம் மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றிப் போனது.

நாரைக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அது ஒரு வனத்திற்குள் சென்று, அங்கிருந்த நீர்நிலைகளில் சிக்கிய மீன்களைத் தின்று வாழ்ந்தது. அங்கு அச்சோ என்ற குளம் இருந்தது.

இதன் கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். இந்த புண்ணியசீலர்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. இருந்தாலும், அந்த தவசீலர்கள் வசிக்கும் பகுதியில் மீன் பிடித்து சாப்பிடுவது மகாபாவம் என நாரை நினைத்தது.



அங்குள்ள முனிவர்களில் ஒருவரது பெயர் சத்தியன். இவர் மதுரை தலம் பற்றியும், அங்கு குடிகொண்டிருக்கும் சுந்தரேஸ்வரர் பற்றியும் அருமையாக தன் சகமுனிவர்களிடம் பேசுவார்.

இதைக் கேட்ட நாரை மதுரை நோக்கிப் பறந்தது. பொற்றாமரைக் குளத்தின் நீர் தன் மீது படும்படியாக தலையை மூழ்கி விட்டு பறந்தது. அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதி மேலுள்ள இந்திர விமானத்தைச் சுற்றி சுற்றிப் பறந்தது 15 நாட்கள் இவ்வாறே செய்து, பதினாறாம் நாள் பொற்றாமரைக் குளக்கரைக்கு வந்தது.

குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. அவற்றைப் பிடித்து உண்ண எண்ணிய வேளையில், ஞானம் பிறந்தது. இப்படி செய்வது பாவமல்லவா? அது பசியைப் பொறுத்துக் கொண்டது.


தனது இயற்கையான சுபாவத்தைக் கூட கருணையின் காரணமாகவும், தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றிக்கொண்ட நாரையின் முன்னால் சுந்தரேஸ்வரர் தோன்றி, என்ன வரம் வேண்டும் நாரையே? என்றார். ஐயனே!

எங்கள் இனத்தவர் மீன்களைப் பிடித்து உண்ணும் சுபாவமுடையவர்கள். ஆனால், இந்த புண்ணிய குளத்தில் அதைச் செய்யாமல் இருக்க தாங்களே அருள வேண்டும். எனவே, இந்தக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். மேலும், எனக்கு சிவலோகத்தில் தங்கும் பாக்கியம் வேண்டும், என்றது.

பெருமானும் அவ்வாறே அருளினார். நாரை நான்கு புயங்களும், மூன்று கண்களும் பொருந்திய சிவ வடிவம் பெற்று, வானுலகத்தோர் தூவிய மலர் மாரியில் மூழ்கியவாறு விமானத்தில் ஏறித் தேவ துந்துபிகள் முழங்க சிவலோகத்தை அடைந்தது.

பின்னர் நந்தி கணங்களுள் ஒன்றாய்த் தங்கியிருந்தது. நாரையின் வேண்டுதற்கிணங்க இன்று வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. சொக்கே நின் தாளே துணை....


பெளர்ணமி


1.பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....
2.அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....

3.நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....

4.உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....
5.பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில் இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்

Wednesday, 18 January 2017

சிவபெருமானின் குணங்கள்


சிவபெருமான் ஞானக்கண் என்று கூறப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், அவருடைய ஆயுதமாகத் திரிசூலம் உள்ளது. அதனுடன் இசைக்கருவியான உடுக்கை (டம்டம்) இணைந்துள்ளது. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.

தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். 


அடுத்து யானையை அனுப்பினர், அதன் தோலினையும் உரித்திக் கொண்டார். கொலையாயுதமான மழுவினை எய்தனர், அதனைத் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாகச் சிவபெருமான் இணைத்துக் கொண்டார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.

காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார். பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு)வாசுகி பாம்பினால் கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர் என்பனவெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாகக் கூறப்படுகிறது.

சிவனின் குணங்கள் :



சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் எனத் தன்னை நினைத்துத் தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களைக் கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.

Tuesday, 17 January 2017

சிவபெருமான் ஏன் நாகங்களை தண்டித்தார்

றைவன் சிவபெருமான் கழுத்திலும், கைகளிலும் சில நாகங்களை அணிகலன்களாக அணிந்திருப்பார். தாங்கள் சிவபெருமானுக்கு அணிகலன்களாக இருப்பதால் தான், அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் என்று அந்த நாகங்கள் நினைத்துக் கொண்டன. மேலும் இறைவனை யார் வணங்கினாலும், அவர்கள் தங்களையும் சேர்த்துத்தான் வணங்குகின்றனர் என்றும் தாங்களாகவே பெருமைபட்டுக் கொண்டன. நாகங்களின் இந்த எண்ணம் சிவபெருமானுக்குத் தெரிந்த போதும், அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்.



இந்த நிலையில் ஒரு முறை விநாயகப்பெருமான், கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமானை வழிபாடு செய்தார். அப்போது நறுமணம் கொண்ட மலர்களை இறைவன் மேல் தூவி போற்றி பாடினார். அவர் தூவிய மலர்களில் ஒன்று, இறைவன் கழுத்தில் சுற்றியிருந்த நாகத்தின் மீது விழுந்தது. உடனே அந்த நாகம், விநாயகர் தன்னையும் மலர் தூவி வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது.

சாபம்

நாகத்தின் இந்த எண்ணம் சிவபெருமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனது கோபத்தை வெளிக்காட்டாமல், விநாயகரின் வழிபாடு முடிவடையும் வரை காத்திருந்தார். விநாயகர் வழிபாட்டை முடித்து அங்கிருந்து புறப்பட்டதும், தன் கழுத்தில் இருந்த நாகத்தை எடுத்து கீழே வீசி எறிந்தார் சிவபெருமான். தொடர்ந்து தனது கைகள், இடுப்பு, கால் போன்றவற்றில் இருந்த நாகங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வீசினார். கீழே விழுந்த நாகங்கள், என்ன ஏதென்று திகைத்தபடி இறைவனை பார்த்தன.



ஈசன் நாகங்களைப் பார்த்து, ‘நாகங்களே! உங்களை என் உடலில் சுற்றியிருப்பதால்தான் நான் அழகாக இருக்கிறேன் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டீர்கள். என்னை வணங்குபவர்கள் அனைவரும் உங்களையும் வணங்குவதாக நினைத்துக் கர்வம் அடைந்தீர்கள். தற்பெருமை கொண்ட நீங்கள், இனியும் என் உடலில் இருக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள்.



கரையான் தாங்கள் வசிப்பதற்காக உருவாக்கிய புற்றுகளில் நுழைந்து, அவர்களை அழித்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் உங்கள் இனத்தின் குணம் இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. அடுத்தவர்களின் உழைப்பை, அச்சுறுத்தி உங்கள் வசமாக்கிக் கொள்ளும் உங்கள் இனத்தினருக்கான குணம் உங்களிடமும் அப்படியே இருக்கிறது. நீங்கள் கொண்ட தற்பெருமையின் காரணமாக நீங்கள் மட்டுமின்றி, உங்கள் இனம் முழுவதும் பெருமையாக கருதும் சக்திகள் அனைத்தையும் இழந்து அவதிப்படுங்கள்’ என்று சாபமிட்டார்.
சிவபெருமான் உடலில் சுற்றியிருந்த நாகங்கள், இறைவன் தங்களுக்கு மட்டுமில்லாமல், தங்கள் இனத்திற்கே மிகப்பெரும் சாபத்தைக் கொடுத்து விட்டதை நினைத்து கவலையடைந்தன. அவைகள் சிவபெருமானிடம், ‘இறைவா! நாங்கள் அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்து, எங்களுக்குச் சாப விமோசனமளித்து உதவுங்கள்’ என்று வேண்டின. 



கோபம் குறையாத சிவபெருமான், நாகங்களின் வேண்டுதல் எதையும் காதில் கேட்டுக் கொள்ளாமல், மன அமைதிக்காக தியானம் செய்யத் தொடங்கினார். சிவபெருமான் கொடுத்த சாபத்தால், தங்கள் சக்தியை இழந்த அந்த நாகங்கள் பூலோகத்தில் வந்து விழுந்தன. சிவபெருமானின் சாபத்தால், நாக இனத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களுடைய சக்திகளை இழந்து அவதிப்பட்டனர். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்கிற நிலை மாறி, அவர்கள் வெறும் மண்புழுவைப் போல் சாதாரணமாக மாறிப் போனார்கள்.

இதையடுத்து நாக இனைத்தைச் சேர்ந்தவர்கள், ஆதிசேஷன் தலைமையில் கூடி ஆலோசித்தனர். அதன் பின்னர் நாக இனத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படும் ராகு, கேது, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகியோர் சிவபெருமானை சந்தித்து, சாப விமோசனம் கேட்பது என்று முடிவு செய்தனர். 


ஆதிசேஷன் தலைமையில் கயிலாயம் சென்ற அவர்கள், சிவபெருமானை நேரில் பார்த்து வணங்கினர். பின்னர் அவர்கள் சிவபெருமானிடம், ‘இறைவா! தங்கள் கழுத்தில் அணிந்திருந்த எங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு நாகம் செய்த தவறுக்காக, நாங்கள் அனைவரும் வருந்துகிறோம். அந்த நாகம் செய்த தவறினை மன்னித்து, எங்கள் இனத்தினர் இழந்த சக்திகள் அனைத்தும் மீண்டும் கிடைத்திட அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டினர்.


ஒரு நாகம் செய்த தவறுக்காக, நாக இனம் முழுவதையும் தண்டித்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்து கோபம் குறைந்தார் சிவபெருமான். ‘நாகங்களே, உங்களின் வேண்டுதலை ஏற்கிறேன். வரும் சிவராத்திரியன்று நான்கு வேளைகளிலும், வேளைக்கு ஒரு சிவலிங்கமாக, பூலோகத்தில் நான்கு இடங்களில் இருக்கும் சிவலிங்கங்களை வழிபட்டால், உங்கள் இனத்தினர் இழந்த சக்திகள் அனைத்தும் மீண்டும் கிடைக்கும்’ என்று சாப விமோசனமளித்தார்.

சிவபெருமான் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த நாகங்கள், இறைவனுக்கு நன்றி தெரிவித்தன. பின்னர் அவர்கள் சாப விமோசனம் பெறுவதற்காகப் பூலோகம் சென்றனர்.

விமோசனம்


பூலோகம் வந்த நாகங்கள் இறைவன் சொன்னபடி, சிவராத்திரியன்று நான்கு வேளைகளில் நான்கு சிவலிங்கங்களை வணங்குவதற்கேற்ற இடத்தைத் தேடத் தொடங்கின. அதன்படி கும்பகோணம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகூர் ஆகிய நான்கு இடங்களில் அமைந்திருந்த கோவில்களில் இருக்கும் சிவலிங்கங்கள், தங்கள் வழிபாட்டிற்கு சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்தன. பின்னர் சிவராத்திரி நாளுக்காக காத்திருந்தன.



சிவராத்திரி நாளும் வந்தது. ஆதிசேஷன் தலைமையில் ராகு, கேது, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகியோர் முதல் ஜாம வேளையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்துக்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டனர்.

அதன் பிறகு அந்த நாகங்கள், அங்கிருந்து திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலுக்குச் சென்றன. இரண்டாம் ஜாம வேளையில், அங்கிருக்கும் சிவலிங்கத்துக்குச் சிறப்பு வழிபாடு களைச் செய்து, தங்கள் இனத்தவர்களுக்குச் சாப விமோசனமளிக்கும்படி வேண்டிக்கொண்டன.



அதனைத் தொடர்ந்து நாகங்கள், மூன்றாம் ஜாம வேளையில் திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவிலுக்குச் சென்றன. அங்கிருந்த சிவலிங்கத்துக்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தன. அப்போது அவர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்தார். ‘நாகங்களே! சிவராத்திரி நாளில் உங்கள் வழிபாட்டில் மனம் மகிழ்ந்தேன். இனி உங்கள் இனத்தவர் இழந்த சக்திகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும்’ என்று சொல்லி மறைந்தார்.

தங்கள் இனத்திற்கு சாப விமோசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஆதிசேஷன் தலைமையிலான நாகங்கள், கடைசியாக நாகூர் நாகநாதர் கோவிலுக்குச் சென்றன. அங்கு, நான்காவது ஜாம வேளையில் சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்த நாகங்கள், தங்கள் இனத்தவருக்குச் சாப விமோசனமளித்து, இழந்த சக்திகளை திரும்பத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி தெரிவித்து வழிபாடுகள் செய்தன. 


பின்னர், ‘இறைவா! தாங்கள் அணிகலன்களாக அணிந்திருந்த எங்கள் இனத்தைச் சேர்ந்த நாகங்களை மன்னித்து, மீண்டும் அவைகளை அணிகலன்களாக அணிந்து, எங்கள் இனத்திற்குப் பெருமை சேர்த்திட வேண்டும்’ என்று வேண்டின. 

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நாகங்களே! உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். என் உடலில் அணி கலன்களாக இருந்த நாகங்கள், மீண்டும் என்னை வந்தடையும்’ என்று சிவபெருமான் கூறினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த நாகங்கள், தங்கள் வழிபாடுகளை நிறைவு செய்து அவரவர் இடத்திற்குத் திரும்பிச் சென்றன.     



ஒவ்வொரு இடத்திலும் முதன்மையாக இருப்பவர் களைச் சுற்றிலும் சிலர் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள், தங்களையே முதன்மையானவர்களாக நினைத்துக் கொண்டு தவறுகளைச் செய்யும் நிலையில், அவர்களுக்கு மட்டுமில்லாமல், அவரைச் சார்ந்தவர் களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை நாகங்கள் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.         

சிவபெருமானிடம் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!


சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!
சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் ்அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? 
ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!
சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.
சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.
இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால், மிகவும் உடல்திறன் அதிகமாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான். 
இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்..

| ஜடாமுடி |
சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.

| நெற்றிக்கண் |
சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

| திரிசூலம் |
திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

| ஆழ்ந்தநிலை |

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

| சாம்பல் |
சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

| நீலகண்டம் |
சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.

| உடுக்கை |
சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

| கங்கை |

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

| கமண்டலம் |
சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

| நாகம் |
சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.