Monday, 6 February 2017

பக்தியால் சாய்ந்து நிமிர்ந்த சிவலிங்கம்


பக்தியால் சாய்ந்து நிமிர்ந்த சிவலிங்கம் !
திருப்பனந்தாள் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருணஜடேஸ்வரர் என்னும் செஞ் சடையப்பர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் சக்தியாக பெரியநாயகி அம்மன் அருள்பாலிக்கிறாள்.
இந்த அம்மனுக்கு சிவபெருமான் ஞானோபதேசம் செய்த தலம் இது என்று கூறப்படுகிறது.
ஆலயத்தின் மேற்கு நோக்கிய ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுரம், ஈசனை தரிசிக்க நம்மை சுண்டி இழுக்கிறது.
கருவறையில் சுயம்புவாக தோன்றிய ஈசன், கம்பீரமாய் காட்சியளிக்கிறார்.
சாய்ந்த லிங்கம்🌹🌿
தாடகை (ராமாயணத்தில் வருபவள் அல்ல) என்ற பெண், புத்திர பாக்கியம் வேண்டி இத்தல ஈசனை தினமும் மாலை சூட்டி வேண்டி வந்தாள்.
அன்றும் அவ்வாறுதான் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும் பணியை செய்வதற்காக கோவிலுக்கு வந்திருந்தாள்.
மாலையை எடுத்து சிவலிங்கத்துக்கு சூடப்போகும்போது, எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது.
அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே, சிவலிங்கத்துக்கு மாலை சூட்ட முயன்றாள்.
ஆனால் முடியவில்லை.
சேலையைப் பற்றியபடியே கையை உயர்த்தி, சிவலிங்கத்திற்கு மாலை சூட்ட இயலவில்லை.
இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள்.
அவளுக்காக இரங்கிய ஈசன், தனது சிவலிங்க மேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார்.
இதனால் மனம் மகிழ்ந்து போன தாடகை, சிவபெருமானை துதித்து வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்றாள்.
அதன்பின்னரும் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது.

குங்குலியக் கலய நாயனார்🌿🌹
ஒரு நாள் இவ்வாலயத்தில் இறைவனை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான்.
தனது படை வீரர்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும், அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் திருக்கடையூரில் அவதரித்த, 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார்.
இறைவனை தரிசிப்பதற்காக கருவறைக்கு சென்ற நாயனாருக்கு, சிவலிங்கம் தலை சாய்ந்திருப்பதைக் கண்டு கலக்கமுற்றார்.
பின்னர் சாய்ந்திருந்த சிவலிங்கத்தை தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு, அந்த கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார். முதலில் சிவலிங்கம் நிமிரவில்லை.
பக்திக்காக நிமிர்ந்தது🌿🌹
ஆனால் குங்குலியக் கலய நாயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக் கொண்டே வந்தது.
சிவலிங்கம் நிமிரவில்லை என்றால், கயிறு இறுகி, நாயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது.
குங்குலியக் கலய நாயனார் விடவில்லை.‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே தன் பலம் கொண்ட மட்டும், அந்த சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார்.என்ன ஆச்சரியம்! அதுவரை நிமிராத சிவலிங்கம், நிமிர்ந்தது நாயனாரின் பலத்துக்காக, சிவலிங்கம் நிமிர்ந்ததா?
இல்லை அவரது பக்தியால் அல்லவா! நேர் நோக்கி நின்றார் அந்த ஈசன்.
இந்த சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாளில் என்று கூறப்படுகிறது.
தாடகைக்காக ஈசன், சிவலிங்கத்தை சாய்த்துக் கொடுத்ததும், குங்குலியக் கலய நாயனாருக்காக சாய்ந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் ஆலயத்தின் பதினாறு கால் மண்டபத்தில் உள்ளன.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மேற்கு கோபுரத்தின் தெற்கே, குங்குலியக் கலய நாயனாரின் சன்னிதி அமைந்துள்ளது.
ஒரு முறை பசியோடு இத்தலத்திற்கு வந்த காளமேகப் புலவருக்கு ஈசன், சிவாச்சாரியார் வடிவில் வந்து அன்னம் அளித்துப் பசி ஆற்றியுள்ளார்.
இதனை கவி காளமேகம் தனது பாடலில் போற்றிக் கூறியுள்ளார்.
எனவே இத்தல ஈசனை வழிபட்டால் வறுமை, பஞ்சம் அகலும். நம் வாழ்வில் அன்னத்திற்கு குறை வராது.
நன்றி :- சிவனடியான் வடிவேலன்

1 comment:

Murugan Azhaguvel said...

நன்றி சகோ