Monday, 27 February 2017

கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல் -தமிழகம்


👆 கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்!

( அவசியம்  அனைவரும்  படிக்கவும் )

நன்றி : விகடன் 

குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்! 


சில வருடங்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம். சில வாரங் களுக்கு முன், நடிகர் பார்த்திபன் சென்னை காவல் ஆணையரிடம் குழந்தைக் கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்; குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக, ‘அபயம்’ அமைப்பு உருவானது. தவிர, ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக குரல் கொடுத்துவருகின்றன. காரணம், அந்தளவுக்குப் பரவலாக உங்கள் ஊர்களிலும், தெருக்களிலும் ஊடுருவியுள்ளது இந்த நெட்வொர்க். அதன் மாயக்கரங்களில் எந்தக் குழந்தையும் சிக்கலாம் என்பதே நிலை... உங்கள் குழந்தை உட்பட!

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும்  50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். 


குழந்தைகளை யார் கடத்துகிறார்கள்... எப்படிக் கடத்துகிறார்கள்... எதற்காக கடத்துகிறார்கள்? அதிர்ச்சியளிக்கும் பின்னணியை எடுத்துரைத்தார், குழந்தைகள் உரிமைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் ஆர்.தேவநேயன். 

எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படலாம்! 

‘‘குழந்தைகள் கடத்தல் இன்றைய சூழலில் மிக முக்கியமான பிரச்னையாக, பரவலான குற்றமாக மாறிவிட்டது என்பது சுடும் நிஜம். பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் குடும்பத்துப் பிள்ளைகளும், அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளும்தான் அதிகமாகக் கடத்தப்படுகிறார்கள். தவிர, நடுத்தர வர்க்கத்தில் இருந்து தொழிலதிபர் வீட்டுக் குழந்தைகள் வரை யாரும் கடத்தப்படலாம் என்பதும் நிதர்சனம்.  


எப்படிக் கடத்தப்படுகிறார்கள்?

பிளாட்ஃபாரக் குழந்தைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில், பெற்றோர் அயர்ந்து தூங்கும்போது லாகவ மாகக் கடத்தப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதில் அங்கு பணியாற்றும் செவிலியர்களில் இருந்து கடைநிலை ஊழியர்கள்வரை பலர் உடந்தையாக இருக்கிறார்கள். 

நடுத்தரக் குடும்பத்தினர், தொழிலதிபர்கள் வீட்டுக் குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டுவிட்டால்... அந்தக் கும்பல் அக்குழந்தையின் நடமாட்டங்களை பல மாதங்களாகக் கண்காணிக்கிறது. அது எப்போது பள்ளிக்குச் செல்கிறது, திரும்புகிறது, அழைத்துச் செல்பவர் யார், குழந்தை எப்போது தனியாக இருக்கும், விடுமுறை நாட்களில் எங்கு விளையாடச் செல்லும் என்று தெரிந்துகொண்டு, ஒருவரை இயல்பாக அந்தக் குழந்தையுடன் பழகவிட்டு, தகுந்த நேரத்தில் கடத்திவிடுகிறார்கள். 

ஒரு குழந்தை கடத்தப்பட்ட செய்தி வருகிறதே தவிர, அது மீட்கப்பட்டதா என்ற அப்டேட்கள் பெரும்பாலும் வருவதில்லை. கடத்தப்படும் 100 குழந்தைகளில், 10 - 20 குழந்தைகள்தான் நல்ல நிலை யிலோ, சேதாரங்களுடனோ மீட்கப் படுகின்றனர்.  மற்ற குழந்தைகளின் நிலை அறியப்படாதது. கடத்தல் காரர்களை அடையாளம் கண்டு விடுவதால், கடத்தப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டுவிடுகின்றனர். 



எதற்காகக் கடத்துகிறார்கள் குழந்தைகளை? 

 சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்தெடுத்தல், பிச்சை எடுத்தல், குழந்தை தொழி லாளர்கள், பாலியல் குற்றங்கள், உடலுறுப்பு திருட்டு, நரபலி என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். 

 கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளை, தங்கள் பிள்ளை கள் போல மடியில் கட்டிக்கொண்டு பிச்சை எடுக்கிறது ஒரு கும்பல். ஏராளமான சிக்னல்களில் இந்தக் கும்பல் பெருகிக்கொண்டே வருகிறது. அந்தக் குழந்தைகளுக்கு போதையேற்றும் மருந்தைக் கொடுத்து, எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருப்பார்கள். மயங்கிய குழந்தையைச் சுமந்தபடி, கையேந்தி, பொதுமக்களின் பரிதாபத்தை தூண்டி, பிச்சையெடுப்பது இந்த கும்பலின் தொழில். ஒரு வாரம் சோழிங்கநல்லூர், அடுத்த வாரம் தாம்பரம் என இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு தொடர்ச்சியான நெட்வொர்க்.



 பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சட்டத்துக்கு புறம்பான தத்தெடுத்தலுக்காகவும் கடத்தப் படுகின்றனர். குறிப்பாக, இந்தத் தேவையில் ஆண் குழந்தைகளுக்குப் பெரிய டிமாண்ட் இருக்கிறது. 

 கடத்தப்பட்ட 5 - 10 வயதுடைய குழந்தைகளை மாநில எல்லைகளில் சட்ட விரோத செயல்பாடுகளில் பயன்படுத்துகின்றனர். அதாவது, மாநில எல்லை களில் உள்ள சோதனைகளில் இருந்து தப்பிக்க, கடத்தப் பட்ட குழந்தைகளின் உடைகளுக்குள் போதை பொருட்களை வைத்து கடத்து கின்றனர். இதே வயதுடைய குழந்தைகளைக் கடத்தி, கொத்தடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர். 



 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கடத்தி நரபலி போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மற்ற கடத்தல்களைக் காட்டிலும், இதற்காக கடத்தப்படுவது குறைவுதான்.

 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்திய கடத்தல்கள் பெரும்பாலும், பாலியல் தொழிலுக்காகத் தான். இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளில் செயல்படும் பாலியல் தொழிலுக்கும், ஆபாச படங்களை எடுக்கவும் பயன்படுத்து கிறார்கள். 

 வயது வரம்பின்றி உடலுறுப்பு திருட்டுக்காகவும் பெருமளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.



 தொழிலதிபர்களின் குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் கும்பலும் உண்டு. சென்னை `ஈசிஆர்', `ஓஎம்ஆர்' மற்றும் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஏராளமான ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவும், குழந்தைகளைக் கடத்தி காரியத்தை சாதிக்கும் கும்பல்கள் ஏராளமாகச் செயல்படுகின்றன.

 குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளை சிறுவயதிலேயே கடத்திவிடுவதால், அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அடையாளம் காண முடியா மலும், தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல வாழப் பழகிவிடுகின்றனர்’’ என்கிறார் தேவநேயன்.

 இன்னும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவ தற்கான அறிவுரைகள், குழந்தை கடத்தலை தடுப்பதற்கான அரசு நிர்வாக அமைப்பு பரிந்துரை, குழந்தைகள் கடத்தப்பட்டால், தாமதிக்காமல் புகார் அளிக்கவேண்டிய தளங்கள், தத்தெடுப்புக்கான சட்ட விதிமுறைகள், குழந்தை கடத்தல் கும்பலுக்கான சட்டப்பூர்வ தண்டனை... 

குழந்தை கடத்தலில் தமிழகம்..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா, பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் போன்ற நகரங்களுக்கும் குழந்தைகள் அதிகமாக கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தலில் மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த குழந்தை கடத்தல்கள்:

2014 - 441
2015 - 656
2016 (முதல் மூன்று மாதங்களில்) - 58 

கடத்தல் டார்கெட் இடங்கள்!

ஒரு நாளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கும்

1.அரசு மருத்துவமனை களில்தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. 

2.தவிர, ரயில்நிலையங்கள், 

3.பேருந்து நிலையங்கள், 

4.கோயில்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில், கடத்தல் கும்பல் டீமாக செயல்பட்டு பிள்ளைகளைக் கடத்துகிறார்கள். 

5.தற்போது கோடை வாசஸ்தலங்கள்தான் அவர்களின் டார்கெட் இடங்கள். 

இந்தச் சமயத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் தங்களின் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கடத்தல் நெட்வொர்க்! 

கடத்தப்பட்ட ஒரு குழந்தை, எப்படி கைமாற்றப்படுகிறது என்பதை, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டபோது, இதயத் துடிப்பு அதிகரித்தது.  

‘‘கடத்தப்பட்ட ஒரு குழந்தையானது, ஒரு மணி நேரத்துக்குள் அடுத்த குரூப்புக்கு கைமாற்றப்படும். அடுத்து சில மணி நேரங்களுக்குள் மாநில எல்லையைக் கடந்து சென்றுவிடும். அடுத்தடுத்து பல குரூப்களுக்கு கைமாற்றப்பட்டு, பல மணி நேரங்களில் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். அந்த மெயின் கும்பல், பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த கடத்தல் பின்னணியில், பல பெரிய வெளிநாட்டு நெட்வொர்க் செயல்படுகின்றன. .



ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையும் அவரவர் வயது, அழகு, உடல் அமைப்பைப் பொறுத்து ரேட் ஃபிக்ஸ் செய்யப்படுகிறார்கள். ஆயிரத்தில் இருந்து பல லட்சம்வரை இந்த ரேட் மாறுபடும். தொழிலதிபர்களின் குழந்தைகளுக்கு, கோடியில் ரேட் பேரம் நடக்கும். கடத்தப்பட்ட எந்த ஒரு குழந்தையையும், ஓராண்டுக்கு மேல் ஒரு இடத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிநாடுகளுக்குக் குழந்தைகளை கடத்திவிட்டால், 80 - 90% மீட்பது கடினம். இந்த குழந்தைகள் கடத்தல் கும்பலைப் பிடிப்பது அரிதான செயல். அப்படியே ஒரு குரூப் போலீஸிடம் சிக்கினாலும், அடுத்த குரூப்பை காட்டிக்கொடுக்கவே மாட்டார்கள். அதனால்தான் இதுவரை எந்த நெட்வொர்க்கும் மாட்டவில்லை’’ என்கிறார் நண்பர்.


அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....

Wednesday, 22 February 2017

சிவன் என்பவர் யார் ?

சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான்.அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. 

ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..?

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் 'இன்னார்' என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர்.


தேவர்களும் தேவதைகளும் வந்தனர். அசுரர்களும் பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக, தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாய் இருந்தால் தேவர்கள் வர மறுத்துவிடுவர்.

அவர்களால் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால், பகையை மறந்து, இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர்.

அதோடு, சிவன் பசுபதி அல்லவா? எல்லா உயிரினங்களுக்குமே கடவுளாயிற்றே - அதனால் எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன.
இது ராஜவம்சத்துத் திருமணம் - ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே.
அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.
சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. "சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா?" என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர்.
ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. எந்நேரமும் தன்னுடன் இருக்கும் பூதகணங்களை மட்டும்தான் அவர் அழைத்து வந்திருந்தார். 
அவையும் உருக்குலைந்த உருவத்துடன், பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தன. அது போதாதென்று, அவற்றிற்கு மனித பாஷை வேறு பேசத் தெரியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த வகையில் ஏதோ இரைந்து கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.
இந்நேரத்தில், பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார்.
சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது.
முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. 

படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.
உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர்.
அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். 
மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார்.
 இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை... இதுதான் உங்கள் பதிலா?" என்று இரைந்தார்.
நாரதர், "அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை," என்றார். ராஜன் வினவினான், "அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா?" நாரதர், "இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்," என்று சொன்னார்.
இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், "தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்?"
நாரதர் சொன்னார், "அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை.
 அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். 

அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார்.
ஓம் நமசிவாய!!!!!

Tuesday, 21 February 2017

அகத்தியமகரிஷி அருளிய மஹா சிவராத்திரி விரதம்



#அகத்தியமகரிஷி_அருளிய #சிவராத்திரி_விரதம்_இருக்கும் முறை!!!

சித்தர்களின் தலைவராக இருப்பவரும்,தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும்,ஜோதிடத்தின் தந்தையும்,சித்த மருத்துவத்தின் தந்தையும்,மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் அருளால் இந்த பதிவினை உங்களுக்கு வழங்குகிறோம்;

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,நமது கர்மவினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்;

அதுவும் எப்படி? இதுவரையிலும் நாம் எத்தனை ஆயிரம் முறை அல்லது எத்தனை லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருப்போம் என்று நமக்குத் தெரியாது;

அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்;அப்படி கரைந்து காணாமல் போவதால்,அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்தரகசியம் ஆகும்;

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்; 12 தேய்பிறை சிவராத்திரிகள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;எக்காரணம் கொண்டும் இதில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது;

அதுவும் சிவராத்திரி இரவில் நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு,மறுநாள் அதிகாலையில் 5.20 முதல் 6.20க்குள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகே,சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்;

40 ஆண்டுகளுக்கு முன்பு,வாரம் ஒருமுறை குடும்பத்துடன் குலதெய்வம் இருக்கும் இடத்துக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக இருந்தது;

20 ஆண்டுகளுக்கு முன்பு,அதுவே மாதம் ஒரு நாள் என்று குறைந்துவிட்டது;இதெல்லாம் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களால் மட்டுமே பின்பற்ற முடிந்தது;மாநகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களால் இதைக் கூட பின்பற்ற முடியாமல் போனது;

தற்போது,ஆண்டுக்கு ஒருமுறைதான் அதுவும் மஹாசிவராத்திரி எனப்படும் மாசி மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மட்டுமே குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறார்கள்;

ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்;நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்;இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;


1.முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;

2.இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;

3.மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;

4.நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;

சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்;சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்;அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்;எத்தனையோ தருணங்களில் பல்வேறு சொந்த வேலையாக பல நாட்கள் இரவுகளில் இரவு முழுவதும் விழித்திருக்கிறோம்;

ஆனால்,சிவராத்திரியில் விழித்திருப்பதில்லை;காரணம் சிவராத்திரியின் மகிமையை எடுத்துச் சொல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனர்

முதல் கால பூஜை(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)

பசும்பால்(கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்;பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல);தேன்,பசுநெய்,பசும் சாணம்,கோஜலம்(பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது;சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;

சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;இதனால்,வேத நாயகனின் ஆசி கிட்டும்;பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்;இதனால்,பெரும் புண்ணியம் கிட்டும்;இதனால்,அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்;எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள்,சிவராத்திரி பூஜைக்கு பணம் அன்பளிக்காக் கொடுக்கலாம்;

இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்;ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால்,ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;
அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;இதனால்,ருத்ரம்,ரிக் வேதம்,சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;

ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!


இரண்டாம் ஜாம(கால)பூஜை(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால்,நம்முடைய பிறவி முடிந்து,மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;

பால்,தேன்,சர்க்கரை,நெய்,தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்;ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;

இந்த அபிஷேகத்திற்கு,பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள்,தாய்ப்பால் பெறுவாள்;சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்;காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு;
கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;

சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது;
தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும்;
சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்;இதனால்,லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்;தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்;நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்;இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;

இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில்(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்;க்ருஷ்ண யஜீர்,சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன;இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்;இதனால்,நாடு சுபிட்சமடையும்;நாமும் நன்றாக இருப்போம்;இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;

ஒருவேளை,யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; சிவாய நம என்று இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;

செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச்
செம்பு பொன்னான திரு அம்பலமே!


இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்;சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;

மூன்றாம் ஜாம(கால) பூஜை(நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)

இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்;வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;
சாம வேதம் பாடவேண்டும்;சாமவேதம் தெரியாவிட்டால்,சிவயசிவ என்று நள்ளிரவு 12 முதல் பின்னிர்வு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;

போகின்ற உயிரை நிறுத்தவும்,விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;

இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ;சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ,அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;

நான்காம் ஜாம(கால) பூஜை(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்;மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்;வில்வத்தாலும்,நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்;பச்சரிசி சாதம் வடித்து,அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்;இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;
அதர்வண வேதம் பாடவேண்டும்;அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;
அதர்வண வேதம் தெரியாவிட்டால்,பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;

சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!


இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்று ஜபித்தாலே போதுமானது;பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;
இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும்,சிவராத்திரி விரதங்களை யாரொருவர் 24 ஆண்டுகள் தொடர்ந்து செய்கின்றார்களோ,அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம்,பூ தானம்,கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்;அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும்;அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்;அவர்களின் பரம்பரையும் குருவோடு சொர்க்கத்தை அடைவார்கள்;

சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது;இதன் படி,மகாசிவ ஆகமங்களும்,சிவபுராணங்களும் விவரிக்கின்றன;
சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;
சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;
கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;
ஓம் அருணாச்சலாய நமஹ

Monday, 20 February 2017

குழந்தைகளின் உணவும் தேர்வு மதிப்பெண்களும்


 1 கப் வெண்டைக்காய் தினமும் கொடுங்கள்!
1.தேர்வுக்கான உணவு குறித்து கூறும், மைண்ட் ப்ரெஷ் டிரெயினிங் மனவளப் பயிற்சியாளர் கீர்த்தன்யா: தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு, தாம் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். ஆனால், 'படித்தது மறந்து விடுகிறதே... எப்போதும் ஒருவித சோர்வு இருப்பதால், எப்படி நம்மால் படிப்பில் கவனம் செலுத்த முடியும்' என்ற வருத்தமும் வாட்டும்.

2.உடல் மற்றும் மூளை செயல்திறனை அதிகரிக்க செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால், முழு வெற்றி சாத்தியம்.
3.நம் மூளையைப் போலவே தோற்றமளிக்கும் வால்நட், சுறுசுறுப்பைத் துாண்டுகிறது. தினமும், 20 கிராம் நட்ஸ் கலவையாகச் சாப்பிட்டு வந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதத்தில் கிடைக்கும். அதையும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் சாப்பிடலாம்.


 4.நீண்ட நேரம் அமர்ந்து படிக்க உடலும், மூளையும் களைத்துப் போகாமல் ஒத்துழைக்க சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். மதிய உணவில் கண்டிப்பாக கீரை, காய், தயிர், சாதம், தலா 1 கப் போதுமானது. 
தேர்வு எழுதும் வரை, தினமும் வேண்டுதல் போல, ஒரு கப் வெண்டைக்காய் சேர்த்துக் கொடுங்கள். 


5.கணிதப் பாடத்தில் மட்டும் அல்ல, எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற வெண்டை உதவும்.
மூன்று வேளை வயிறு முழுக்க சாப்பிடுவதை விட, குறுகிய இடைவெளியில் சிறு சிறு அளவில் சாப்பிடுவது நல்லது. வீட்டை தவிர வெளியில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்களுக்கு தேர்வு முடியும் வரை, 'குட்பை' சொல்லி விடுங்கள். ஆசைப்பட்டு கேட்டாலும் வாங்கி தராதீர்கள். 



6.காபி மற்றும் டீ கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இனிப்பு, உப்பு, காரம் மற்றும் அதிக ருசியான உணவுகள் கொடுப்பதும் அளவோடு இருக்கட்டும். அதிக மசாலாப் பொருட்கள் சேராத உணவையும், அதிக காரமில்லாத உணவையும் கொடுக்க வேண்டும்.


7.இரவு துாங்கும் முன், பால் அல்லது லேசான சுடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொடுக்கலாம்; தேர்வு பற்றி பதற்றம், மன அழுத்தம் குறையும். தினமும், 6 அல்லது 7 மணி நேரம் வரை துாக்கத்தைக் கட்டாயமாக்குங்கள். 
8.நிறைய நீர்ச்சத்து காய்கறிகளை உணவில் சேருங்கள்.தேர்வு என்பது பயத்தை உண்டாக்கும் விஷயமல்ல. நாம் படித்ததை சரியாகப் படித்து இருக்கிறோமா என்பதை சரி பார்க்கும் தருணமே. இதில் உடல் ஆரோக்கியம், உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்தி, அதிக மதிப்பெண்களைக் குவிக்க வைக்கும்! 

திரூமூலர் கூறும் இலிங்க வகைகள்



திருமூலர் காட்டும் லிங்கங்கள் (அவசியம் படிக்கவும்)
→ இலிங்கம் என்பதற்கு மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன, அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து பின்னர்ப் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.
2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும் என்றும், சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
3. இலிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பை உணர்த்தும் அடையாளத்தை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம். சிவலிங்கம் என்பதை சிவனின் அடையாளம் எனலாம்.
→ திரூமூலர் கூறும் இலிங்க வகைகள்
1. அண்ட இலிங்கம்
2. பிண்ட இலிங்கம்
3. சதாசிவ இலிங்கம்
4. ஆத்ம இலிங்கம்
5. ஞான இலிங்கம்
6. சிவ இலிங்கம
1. அண்ட இலிங்கம் 

அண்டம் என்றால் உலகம். இலிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713) இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724) நிலம் - ஆவுடையார், ஆகாயம் - இலிங்கம், கடல் - திருமஞ்சனமாலை, மேகம் - கங்கை நீர், நட்சத்திரங்கள் - ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை - எட்டு திசைகள் என்று இலிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம். (திருமந்திரம் 1725)
2. பிண்ட இலிங்கம் 

மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.
மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து
(திருமந்திரம் 1726)
என்று திருமூலர் கூறுகின்றார். மக்கள் தலை – பாணம், இடைப்பட்ட உடல் - சக்தி பீடம், கால் முதல் அரை வரை - பிரமபீடம் எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
3. சதாசிவ இலிங்கம் 

இலிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு இருதயம் – ஞானசக்தி, தலை – பராசக்தி, தலைமுடி – ஆதிசக்தி, கவசம் - இச்சா சக்தி, நேத்திரம் - கிரியா சக்தி, சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ இலிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.
4. ஆத்ம இலிங்கம் 

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம இலிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கும் நிலை. நாதமும் விந்துவும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார். திருமூலர் முதலிய தவயோகியர் சிவலிங்க வடிவங்களைப் பீடமும் இலிங்கமுமாக வைத்து பீடத்தை விந்து வடிவம் எனவும் இலிங்கத்தை நாத வடிவம் எனவும் உணர்த்தியுள்ளனர். நாதம் என்பது முதல்வனது ஞானசக்தி நோக்கத்தினால் சுத்த மாயையில் நேர்க்கோட்டு வடிவில் மேலும் கீழுமாக எழும் ஒரு அசைவைக் குறிக்கும். இவ்விரண்டு அசைவும் முறையே முதல்வனது ஞானசக்தியினாலும், கிரியா சக்தியினாலும் விளைவனவாகச் சிவசக்திகளது சேர்க்கையை உணர்த்தும் என பெரியோர்கள் கருதுகின்றனர். இவ்விரு அலைகளும் இணைந்தும், பிணைந்தும், மாறுபட்டும் உலகப் பொருட்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், தேய்ந்து மாய்தலையும் உண்டாக்குகின்றன என்கின்றனர்.
5. ஞான இலிங்கம் 

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770) என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.
6. சிவலிங்கம் 

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு அடையாளத்தின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகிறது. அடையாளமும், உருவமும் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைக்கவோ வழிபடவோ முடியாது. பக்குவம் நாடும் உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய முதனையாக இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம் தேவையாக இருக்கிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அந்த அடையாளத்தினிடத்திலும் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்,
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே
(திருமந்திரம் 1773)
என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை இலிங்க வடிவில் வழிபட்டு நற்பேறுகளைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்வோம்.

Thursday, 16 February 2017

நல்ல சிந்தனைகள்




நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !

அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ; அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் ,
'' ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் !..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !''
என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ......சற்றைக்கெல்லாம் பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்
..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:..மண்டபத்தில் நின்றவாறே , 

கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் ! தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ..........
.இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !! சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :

பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ '
பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....

' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் '
என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது !' ஒரு ஏழைக்கு , சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '

என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!
.
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !