Friday, 5 October 2018

மிருகங்கள் வாழும் உலகம்


இறைவா மணிதனுக்கு நல்ல புத்தியை கொடப்பா

"செய்நன்றி மறந்தார்க்கு உய்வில்லை " - திருக்குறள்

இறைச்சிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் இரவில் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக அவற்றின் கண்களில் பச்சை மிளகாயை சொருகி எடுத்துச்செல்லப்படும் புகைப்படங்கள் இவை.

கொண்டு செல்வது இறைச்சிக்காகத்தான் என்றாலும் கூட அவற்றைக் கொல்லும் வரையாவது அவைகளை ஒரு உயிராக நினைத்துக் கருணை காட்டலாம்.

ஆனால் அவற்றை வண்டியில் ஏற்றும்போதே, இறைச்சியை ஏற்றுகின்ற மனநிலையில் மூட்டையைப் போல் அடித்து நசுக்கி ஏற்றுவதும், இறங்கும் போது தடுமாறும் மாடுகளை மேலிருந்து தள்ளிவிட்டு கால்களை உடைப்பதும், அப்படி உடைந்தாலும் கூட கொஞ்சநேரத்தில் வெட்டப்போறதுதானே என்ற மனநிலையில் சித்தரவதைகளைக் கொடுப்பதும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

அவைகளை கொல்லும் வரையாவது நம்மைப் போன்ற யாரோ ஒரு மனிதருக்காக, உழைத்த கால்நடைகள் அவை, நம்முடைய உணவுக்காக விவசாயியோடு சேர்த்து இந்த மாடுகளும்தான் நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறது என்ற நன்றியுடன் துன்புறுத்தாமல் நடத்துவது தான் குறைந்தபட்ச இரக்கம்.

"மற்ற உயிர்களும் உங்கள் மாதிரி சமூகமே"- திருக்குரான்

"Thou shalt not kill." - Bible

"எல்லா உயிரகளும்
இன்புற்று வாழ்க!
கொல்லா விரதம்
இக்குவலயமெல்லாம் ஓங்குக"
-வள்ளல்பெருமானார்

"எல்லோரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே"
-தாயுமானவர்

Sunday, 30 September 2018

குழந்தையை காணாமல் தவிக்கும் பெற்றோர்

காணாமல் போன குழந்தை பெயர்      ஹரினி.

                                          தந்தை பெயர்       வெந்கடேசன்
                                            தாயர் பெயர்        காளியம்மா
                                              தேதி                      15.9.2018

https://draft.blogger.com/blogger.g?blogID=2290804982277448969#editor/target=post;postID=6681365875519696266

“புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர்!

"ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம்!"


“அன்னிக்கு நானும் எம்பொஞ்சாதியும் வழக்கம்போல புள்ளய தூக்கிக்கிட்டு வெளியூர் திருவிழாவுக்கு ஊசி, பாசி விக்க போயிருந்தோம். ராவு இருட்டுறதுக்குள்ள வூடு திரும்பிடணும்னு கிளம்பினப்போதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிடுச்சு. இனிமே ரிப்பேர் பண்ணிட்டுக் கௌம்புறதுக்கு நேரமாகிடும். அதனால, இங்கேயே எங்கயாவது படுத்து எந்திரிச்சு வெள்ளன கௌம்பிப் போகலாம்னு நினைச்சோம்ங்க. 

பகல்முழுக்க வேல பாத்த அலுப்புல அசந்து தூங்கிட்டோம். நடுராத்தியில கண் முழிச்சுப் பாத்தப்பதான் பக்கத்துல படுத்திருந்த ரெண்டு வயசு புள்ளயக் காணோம்ங்கிற உணர்வே வந்துச்சு. அய்யா சாமி எம்புள்ள எங்கய்யா இருக்கும். என்னய்யா பண்ணிட்டு இருக்கும். 

பச்சப்புள்ளைங்கய்யா அது. ஆத்தா, அப்பன் மொகத்தத் தவிர வேற யாரு மொகமும் அதுக்குத் தெரியாதுங்களே. அய்யா எம்புள்ளயக் காப்பாத்துங்கய்யா. நீங்க எல்லாருமா சேந்து மனசு வெச்சா எம்புள்ளய சீக்கிரமே கொண்டு வந்து சேத்துடலாம்யா. தயவு செஞ்சு கருண காட்டுங்கய்யா” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார்; வாய்விட்டுக் கதறுகிறார் வெங்கடேசன். நாடோடி இனத்தைச் சேர்ந்தவர். இவரின் இரண்டு வயது மகள் ஹரிணி கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போய்விட்டார். இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. குழந்தை கிடைத்தபாடில்லை.

சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு தெரியாத ஊர், பழக்கப்படாத மனிதர்கள் என்பதால் அனைக்கட்டு காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள உதவிக் காவல் ஆய்வாளர் வீட்டின் வாசலிலேயே படுத்து உறங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பான இடம் என்று நம்பி அந்த இரவை அங்கே கழித்தவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட துயரம் நேர்ந்திருக்கிறது. 
“நாங்க நாடோடி இனத்தைச் சேர்ந்தவங்க. உத்திரமேரூர் பக்கத்துல இருக்கிற மானாமதி கிராமம்தான் எங்க சொந்த ஊரு.  காலங்காலமா இப்படித்தான் ஊரு ஊரா போய் பொம்ம, வளையலுலாம் வித்துட்டு வருவோம். எனக்கும் காளியம்மாவுக்கும் 2015 லதான் கல்யாணம் நடந்துச்சு. ஒரு வருஷம் புள்ளயே இல்லைங்க. மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற கடம்பாடி கோவில்ல மண் சோறு சாப்பிட்டதுக்கு அப்பறம்தான் காளியம்மா வயித்துல புள்ள உண்டாச்சு. முத்து கணக்கா பொம்பளைப் புள்ள பொறந்துச்சுங்கய்யா. ஆசை ஆசையா தோளுலயும் மாருலயும் தூக்கி வளத்தோம். காளியம்மா இப்போ ரெண்டாவது உண்டாகியிருக்கா. அஞ்சு மாசம் ஆகுது. ஹரிணி பாப்பா உன்கூட வெளையாட இன்னொரு குட்டி பாப்பா வரப்போகுதுன்னு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டோம். ஆசை ஆசையா வளத்தப் புள்ளயத் தொலைச்சிட்டு இப்போ அனாதை கணக்கா போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே கெடக்குறோம். எங்க மணியே, பவளமே, குலத்தக் காக்க வந்தவளே எங்க இருந்தாலும் அப்பாக்கிட்ட ஓடி வந்துடுடா பட்டு” எனக் கத்திக்கொண்டே தலையில் அடித்து அழுகிறார். 
"சார், தெனமும் நூறுக்கும் எறநூறுக்கும் ஊரு ஊரா அலையிற அன்னாடங்காச்சிங்க நாங்க. படிக்கத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனா, மனுசங்ககூட நல்ல விதமா பழகத்தெரியும். நமக்கு மனுசங்கதான் துணைனு நினைச்சிக்கிட்டு கிடைக்கிற எடத்துல தூங்கி எழுந்துப்போம். அன்னிக்கு ராத்திரி நாங்க இங்க தங்காம ஆட்டோவுலயே ஊருக்குப் போயிருந்தா வழியில போலீஸ்காரங்க இந்த ராத்திரியில எங்க போறீங்க என்ன ஏதுன்னு கேட்டு தொல்லை பண்ணியிருப்பாங்க. கைப்புள்ளய வெச்சிக்கிட்டு எதுக்கு ஒவ்வொரு இடமா நின்னு நின்னு போகணும். சிவனேன்னு தூங்கி எழுந்து போலாம்னுதான் இங்க தங்கினோம். பாவிங்க கொசு வலைக்குள்ள தூங்கிட்டு இருந்த எங்க குல சாமிய தூக்கிட்டு போயிட்டானுங்களே. பெத்த வயிறு கெடந்து துடிக்கிது சார். 
என் குழந்தை சாப்பிட்டுச்சோ தெரியலயே, தூங்குச்சோன்னு தெரியலயே. போலீஸ் ஸ்டேஷன் வழியா போறவங்க எல்லாரும் எங்கள ஒரு மாதிரி பார்த்துட்டுப் போறாங்க சார். ஒரு சிலர் என்கிட்ட வந்து 'உங்க புள்ள செத்துப் போயிடுச்சாம். அதான் வெளியில சொல்லாம மறைச்சிட்டாங்க'ன்னு சொல்லுறாங்க. யார் என்ன வேணா சொல்லட்டும் சார். எனக்கு நம்பிக்கை இருக்கு. எம்புள்ள உசுரோடதான் இருக்கு. அவ எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம் சார்” என்றபடியே வெடித்து அழுகிறார். அவர் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல வழியின்றி தவித்து நிற்கிறோம். 

Wednesday, 15 August 2018

மகான் வேதாத்திரி மகரிஷி தத்துவங்கள்


1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.

3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.

8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.

9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

10. உண்மை எது,  பொய் எது  என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.

11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.

12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.

13.  அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது
எல்லாவற்றிலும் மிக முக்கியம்.

14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை
விடுங்கள்.

15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.

16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை
மனதார உணருங்கள்.

17. 'நானே பெரியவன் நானே சிறந்தவன்' என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.

18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.

Wednesday, 1 August 2018

வாழ்க வளமுடன்


கிரிவலத்தின் மகிமை



திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அறிந்து கொள்ள சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும் பரப்பியவருமான அகத்திய மகரிஷி விரும்பினார்;
எனவே,அவர் திருக்கையிலாய மலையில் இருக்கும் நந்தி பகவானிடம் சென்று கேட்டார்;
திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை கூற இயலுமா? என்று கேட்கின்றார்;
இந்த கேள்வியை கேட்டதும் நந்திபகவானுக்கு கண்ணீர் வருகின்றது;அழுகின்றார்;அழுகின்றார்; அழுதுகொண்டே இருக்கின்றார்;எவ்வளவு காலம் தெரியுமா?
2000 பிரம்மாக்களுடைய ஆயுள் காலம் வரை!
பூமியில் 432 கோடி ஆண்டுகள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள்! அப்படி 100 வருடங்கள் ஆகி விட்டால் ஒரு பிரம்ம பதவி நிறைவடைந்துவிடும்;இன்னொருவர் பிரம்மா பதவிக்கு வந்துவிடுவார்;இப்படி 2000 பிரம்மாக்களின் ஆயுள் காலம் வரை நந்தி பகவான் அழுகின்றார்;அது ஆனந்த கண்ணீர்!
அகத்திய மகரிஷிக்கு வருத்தமாகிவிட்டது;ஏதும் தெரியாமல் கேட்டுவிட்டோமோ? என்று மனம் வருத்தப்பட்டுவிட்டார்;
அப்புறம் தான் தெரிகின்றது;
திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அதுவரை யாருமே கேட்கவில்லை;அகத்திய மகரிஷி முதன் முதலில் கேட்டதால் உண்டான பூரிப்பால் அத்தனை காலம் நந்தி பகவான் அழுதிருக்கின்றார் என்று;
குருவி மூளை கொண்ட நம்மால் இச்சம்பவத்தை ஓரளவுக்கு மேல் ஜீரணிக்க முடியுமா? ஓவர் பில்ட் அப் என்றுதான் எண்ணுவோம்;ஆனால்,நாம் இயல்பாக யாராவது ஒரு ஆன்மீக உண்மையை சொன்னால் பின்பற்றுகின்றோமா?


அதன் பிறகு,நந்திபகவான் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அகத்திய மகரிஷியிடம் சொல்ல ஆரம்பிக்கின்றார்;இன்று வரையிலும் பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்;அவரது உபதேசத்தை அகத்திய மகரிஷி கேட்டுக் கொண்டே இருக்கின்றார்;அதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் படம்!!!
பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாக இருப்பது அண்ணாமலை!
யார் ஒரே பிறவியில் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடய அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன;அதனால், அவர்களுடைய சத்குருவை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கின்றது;அதன் பிறகு,மீண்டும் இந்த பூமியில் பிறவாத வரம் அண்ணாமலையாரால் கிடைக்கின்றது;
இந்த பிறவியிலேயே அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வரவே பிறவி எடுத்திருக்கின்றோம்;நமது 7 வது வயது நிறைவடையும் வரை மட்டுமே இந்த ஆன்மீக லட்சியம் நினைவில் இருக்கின்றது;அதன் பிறகு,இதை மட்டும் மறந்துவிடுகின்றோம்;
இன்றைய கால கட்டத்தில் யாரெல்லாம் அகில இந்திய அளவில் ஆன்மீக அமைப்புகளை நடத்திவருகின்றார்களோ,அவர்கள் அனைவருமே தமது 20 அல்லது 30 வது வயதிற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்தவர்கள் தான்!

இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்;வாரம் ஒரு நாள் அல்லது 15 நாட்கள் ஒருமுறை என்று அண்ணாமலையாரை கிரிவலம் வர திட்டமிடவேண்டும்;இந்த 5 ஆண்டுகள் வரை அசைவம்,மது இரண்டை மட்டும் தவிர்த்தால் போதும்;வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது;
அப்படி 1008 முறை அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவின் தரிசனம் கிடைக்கும்;அவரது அருளால்,அடுத்த மூன்று உலகங்களிலும் அவரது ஆன்மீக வழிகாட்டுதல் கிடைக்கும்;
ஒரே ஒருமுறை "அண்ணாமலை" என்றோ "அருணாச்சலம்" என்றோ "சோணாச்சலம்" என்றோ சொன்னால் 3 கோடி முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அருணாச்சலேஸ்வரர் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;
கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அண்ணாமலையில் "பவுர்ணமி கிரிவலம்" பிரபலம் ஆகியிருக்கின்றது;
பவுர்ணமி அன்று மட்டும் தான் அண்ணாமலை கிரிவலம் செல்வார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்;இது தவறு;
ஒவ்வொரு தமிழ் மாதம் 1 ஆம் தேதி அன்றும் கிரிவலம் செல்வது சைவர்களின் வழக்கமாக இருக்கின்றது;
முதன் முதலில் அண்ணாமலையை கிரிவலமாக வலம் வந்தது நம் அனைவருக்கும் தாயாக இருக்கும் பார்வதி தேவி;தேய்பிறை சிவராத்திரி திதி அன்றுதான் அன்னை கிரிவலம் வந்தாள்;நமது அன்னைக்கு பக்கபலமாக வந்தது நம் அனைவருக்கும் முதல் குருவாக இருக்கும் அகத்திய மகரிஷி தான் கிரிவலம் வந்தார்;
காஷ்மீர் முதல் கண்டி வரையிலும்,குஜராத் முதல் வியட்னாம் வரையிலும் வாழ்ந்து வரும் ஒவ்வொரு இந்துக்குடும்பத்திலும் திருமணம் ஆன தம்பதியர்கள் மணமான மறுநாளே குடும்பமாக வாழ மாட்டார்கள்;
மணமான ஓராண்டுக்குள் மணமகனின் பெற்றோர்+உடன் பிறந்தோரும்;மணமகளின் பெற்றோர்+உடன் பிறந்தோரும் அண்ணாமலைக்கு வருவர்;வந்து தம்பதியாக கிரிவலம் வருவார்கள்;கிரிவலம் நிறைவடைந்த பிறகு,அண்ணாமலையாரையும்,
உண்ணாமுலையையும் வழிபட்டுவிட்டு அவர்களுடைய ஊருக்கு திரும்புவர்;அதன் பிறகுதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்!!! இந்த நடைமுறையை இன்றும் சில சமுதாய மக்கள் மட்டும் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகின்றார்கள்;
கணபதி லோகம், இந்திர லோகம்,எம லோகம்,பைரவ லோகம்,ஸ்ரீசக்கர லோகம், ஸ்ரீவைகுண்டம்,சத்திய லோகம்,
கந்தர்வ லோகம்,நாக லோகம்,வாயு லோகம்,அக்நி லோகம்,முனி லோகம் என்று ஏராளமான உலகங்கள் இருக்கின்றன;இங்கே வாழ்பவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய்ய்ய்ய்ய தெரியும்;ஆனால்,அங்கே இருந்து அண்ணாமலை கிரிவலம் செல்ல அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைக்காது;
நமக்கோ நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமைகின்றது;சரியாக பயன்படுத்திக் கொள்வோம்;
விண்ணுலகங்களில் பித்ருக்கள் உலகம் என்ற ஒன்று இருக்கின்றது;அங்கே நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் பல லட்சம் ஆண்டுகள் தவம் இருந்தால்,இங்கே அவர்களுடைய பேரன்/பேத்தியாகிய நமக்கு ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று நாடிக்கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;
கிரிவலம் செல்லும் முறைகள் மட்டும் 1,00,008 விதங்கள் இருக்கின்றன;
ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் கணபதி கிரிவலம் வருகின்றார்;கண்பதியின் அருளைப் பெற ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் நாம் கிரிவலம் வரலாம்;
ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வராகி அன்னை கிரிவலம் வருகின்றாள்;
ஒவ்வொரு அஷ்டமி அன்றும் பைரவர் கிரிவலம் வருகின்றார்;பைரவ சித்தர்களும் கிரிவலம் வருகின்றார்கள்;கடுமையான கஷ்டங்கள் உள்ளவர்கள் ஒவ்வொரு அஷ்டமி அன்றும் கிரிவலம் வர நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்;
ஒவ்வொரு திருவாதிரை அன்றும் முனி கிரிவலம் வருகின்றார்;முனி கணங்கள் கிரிவலம் வருகின்றன;
ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் ஈசனின் துணைவியும்,நம் அனைவருக்கும் அன்னையாக இருக்கும் பார்வதி தேவி கிரிவலம் வருகின்றாள்;
அருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறுவோம்;
கீழே தாங்கள் பார்ப்பது நந்தி பகவான்,அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை அகத்திய மகரிஷிக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றார்;
அண்ணாமலைக்கு அருகில் (விழுப்புரம், திண்டிவனம்,செங்கல்பட்டு,கிருஷ்ணகிரி,
பாண்டிச்சேரி,கடலூர்,விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி,திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை மற்றும் பல ஊர்களில்) வாழ்ந்து வரும் சிவ பக்தர்கள் இந்த பொன்னான வாயப்பினை பயன்படுத்தி இப்பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்;
அடுத்த 5 ஆண்டுகள் எல்லாவிதமான பொழுதுபோக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய முயற்சி செய்யலாம்;
இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் அண்ணாமலையைச் சென்றடையும் வாய்ப்பு இயல்பாகவே கிட்டியிருக்கின்றது;
மற்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம்+நேரம் அதிகமாக தேவைப்படும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Tuesday, 31 July 2018

அன்னை நல்லதங்காள்




அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.
அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.
நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான்.
-------------
மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது.
காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.
பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.
நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.
வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.
இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம்.
கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

------------------
நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.
அழுதுபுரண்டு அழுதாள்...
ஆபரணம் அற்று விழ.
முட்டி அழுதாள்...
முத்து மணி அற்று விழ.
நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.
நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.
----------------
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.
மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.
பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்
இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள்.



நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.
நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.
காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.



“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னான்.
காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.
சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.
இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.
----------------
நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.
நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.
அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.
அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.
அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?
என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான்.
“சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.
நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.
“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காரி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.
நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.


----------------------
நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.
நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.
''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?''
என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.
நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்
என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.
ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள்.
ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.
பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ''அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க'' என்று கெஞ்சினாள்.
மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். எரிக்க ஈரமட்டைகளை கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.
எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.
ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.
நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.
------------------
பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.
''பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!''
என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.
''அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்''
என்று சொல்லிவிட்டாள்.
காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.
நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம்.
அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்...
“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.
நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள்.
கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள்.
அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள்.
அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.
---------------
ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன.
காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.
மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான்.
''என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!'' என்று கெஞ்சினான்.
''தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்''
என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள்.
இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள்.
நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.
நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.
------------------
நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது.
காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.
நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.
மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள்.
மூளி கூசாமல் பொய் சொன்னாள்.
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.
நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்தது நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள்.
அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான்.
நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான்.
''அய்யோ........'' தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.
தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான்.
பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.
நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள்.
நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான்.
தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.
இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான்.
இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?
வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது.
அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.
நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.


Wednesday, 25 April 2018

கடவுளை ஏன் வழிபட வேண்டும்?


கடவுளை வழிபட வேண்டியதற்கு அநேக காரணங்கள் உள்ளன. அவை:
(1) நித்திய கடமை
முதலாவதாக, கடவுளை வழிபட வேண்டியது இந்துக்களின் ஐந்து நித்திய கடமைகளில் ஒன்றானதும் முதன்மையானதும் ஆகும். நாம் தினமும் கடவுளை வழிபட மறவக் கூடாது. அனுதினமும் காலையிலும் மாலையிலும் மறவாமல் தெய்வங்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றவேண்டும். அன்றாடம் கண்டிப்பாக இல்லத்திலோ அல்லது கோயிலிலோ, கடவுளை பூஜை அல்லது தியானம் மூலம் வழிபட வேண்டும்.

(2) கர்மாவைக் குறைக்க
 அடுத்தபடியாக, கடவுளின் மீது பக்தி வைத்து அவரை வழிபடுவதால் நம்முடைய கர்மாக்களை (வினைப்பலன்களை) குறைத்துக் கொள்ளமுடியும். இந்த உலகில் மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும் கர்மப்பலன்களினால் தான். நம்முடைய பிறப்பின் நோக்கமே, கர்மாக்களைப் போக்கிவிட்டு, இறைவனின் திருவடியை அடைந்து வீடுபேறு (மோக்ஷம்) அடைவதே ஆகும். கர்மாக்களைப் போக்குவதற்கு மிக எளிய மற்றும் சிறந்த வழியாக பக்தி வழிபாடு கூறப்படுகின்றது. ஆகையால், தினமும் மறவாமல் கடவுளை வழிபட வேண்டும்.
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”

(3) நன்றியுணர்வு
-- இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் முடிவிற்கும் வித்தாக இருந்து, இந்த பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாகிய நமக்கு அருள்புரிந்து ஆசிர்வதிக்கும் இறைவனுக்கு நாம் எப்போதும் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். நம்முடைய நன்றியுணர்வை நாம் வழிபாட்டின் மூலம் காட்ட முடியும். நம்முடைய பிறப்பு மற்றும் வாழ்க்கையை எண்ணி நாம் எப்போதும் கடவுளுக்கு நன்றி கூறவேண்டும். மற்றவரோடு ஒப்பிட்டு நம்மை நாமே தாழ்வாக எண்ணிக் கொள்ளக் கூடாது. மனிதனாகப் பிறப்பதுவே அரிது. இந்த அரிதான பாக்கியத்தை அளித்த கடவுளை நாம் என்றும் நன்றியுணர்வோடு வழிபட வேண்டும்.

(4) ஆசிர்வாதம் பெற
-- இந்த உலகத்தில் வாழும் காலங்களில் நாம் பல செயல்களில் ஈடுபடுகின்றோம். இளம் வயதில் கல்வியிலும், பின்னர் பணிகளிலும் தொழில்களிலும், திருமணம் மற்றும் இல்லற சமாச்சாரங்களிலும் ஈடுபடுகின்றோம். எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், எல்லாவற்றிற்கும் மூலவனான இறைவனின் ஆசிர்வாதமும் அனுகிரகமும் நமக்கு அவசியமாகும். இறைவனின் ஆசிர்வாதம் நம்முடைய செயல்களில் ஈடுபட தேவையான பக்குவத்தையும் நுட்பத்தையும் அளிக்கும். நாம் மேற்கொள்ளும் செயலில் வெற்றி ஏற்பட்டாலும் தோல்வி ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படாத முதிர்ச்சியான குணமும் ஏற்படும்.


(5) தெளிவான ஞானத்தைப் பெற
-- கடவுளை அனுதினமும் பக்தியோடும் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமலும் வழிபடுவதால், நம்மால் தெளிவான அறிவைப் பெற இயலும். இந்த தெளிவான அறிவால் நமக்கு எது சரி, எது பிழை, எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது போன்று பகுத்தறியும் பக்குவமான ஞானம் ஏற்படும். இந்த பகுத்தறிவும் ஞானம் இல்லாமையே மனிதர்களின் பெரும்பாலான துன்பங்களுக்கு வித்தாகின்றது. இவ்வாறு கடவுளிடம் இருந்து ஞானம் பெற்றவர்கள் பகுத்து கூறியதே இயம-நியமங்கள் என்று நம்முடைய தர்மத்தில் அமைந்துள்ளன. நமக்கு தெளிவான ஞானத்தை அளிப்பதால் இறைவனே எல்லா உயிர்களுக்கும் பரமகுருவாக திகழ்கின்றார்.


(6) நன்னெறியும் நல்லொழுக்கமும் பெற
-- நல்ல நெறிகளும் நல்ல ஒழுக்கங்களும் உடைய மனிதனே மேன்மையான செயல்களை ஆற்றவல்லவன். வழிபாட்டின் மூலமாக நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நன்னெறிகளும் நல்லொழுக்கங்களும் தோன்றுகின்றன. குறிப்பாக, வழிபாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். உதாரணமாக, நேரம். குறிப்பிட்ட நேரத்திலும் அவகாசத்திலும் ஒரு வழிபாட்டை (பூஜையை) துவங்கி முடித்துவிட வேண்டும் என்ற விதிமுறை வழக்கமானது. இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதால், நாம் நேரந்தவறாத ஒருவராக உருவாக முடியும். நமக்கு காலத்தின் மகத்துவமும் முக்கியத்துவமும் புரியும்.
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.”


(7) தேவைகள் பூர்த்தி பெற
-- மனிதர்களின் தேவைகள் எண்ணற்றது. எப்படி பிரபஞ்சத்திற்கு எல்லை கிடையாதோ அதுபோல மனிதர்களின் தேவைகளுக்கும் எல்லை கிடையாது. ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு தேவைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் எப்போதும் அவர்களின் எல்லா தேவைகளும் பூர்த்தியாகி விடுவதில்லை. அதனால் தான் எப்போதும் எல்லா மனிதர்களும் ஏதாவது தேவை குறைபாட்டுடன் இருக்கின்றனர். நமக்கு எப்போது எது தேவை என்று கடவுளுக்கு நன்கு தெரியும். நமக்கு தேவைபடும் நேரத்தில் கிடைக்கவில்லையே என நாம் வருந்த கூடாது, இப்போது நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை நாம் மதித்துப் போற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். அதை முறையாகப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும். கடவுள் தெய்வங்களாக இருந்து, நமக்கு தேவையானவற்றை நாமே தேடிச் சென்று ஈட்டுவதற்கு தேவையான மனவலிமையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார். அத்தகைய மனவலிமையும் ஊக்கமும் நம்மிடம் இருக்கப்பெற்றால், நம் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகப் பெறுகின்றன.

(8) மனநிறைவும் மகிழ்வும் பெற
-- இந்த உலகத்தில் பணத்தாலும் பொருளாலும் விலைக்கொடுத்து வாங்கமுடியாத சில விஷயங்கள் உள்ளன. அதுதான் மனநிறைவு (மனதிருப்தி), மனமகிழ்வு (சந்தோஷம்) மற்றும் மன அமைதி (ஷாந்தி). இந்த மூன்றில், எது ஒன்று இல்லாமற் போனாலும் அந்த மனிதனின் வாழ்க்கை நரகமாகிப் போகும். எவ்வளவு பணம், பொருள் இருந்தாலும் இந்த மூன்றும் இல்லையென்றால் அந்த மனிதன் வாழும் காலத்திலே நரகவேதனையை அனுபவிக்கிறான். அத்தகைய அத்தியாவசியமான மூன்றை நாம் வழிபாட்டின் மூலம் பெறலாம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது கடவுளை வழிபடுவதால் நாம் மனநிறைவு, மனமகிழ்வு மற்றும் மன அமைதி ஆகியவற்றைப் பெறலாம். இவை இருக்கப்பெற்றாலே, அந்த வாழ்க்கை சொர்க்கமாகின்றது. அதனிலும் மேலான சொர்க்க லோகங்கள் இல்லை.
”மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.”
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.”.

(9) பிறப்பின் குறிக்கோளை அடைய
-- மனிதனின் பிறப்பின் முடிவான குறிக்கோளே பிறப்பில்லா நிலையை அடைவதே. பிறப்பில்லா நிலையே அமிர்த நிலை எனப்படுகின்றது. அதுவே பிறவாழியில் (சம்சாரத்தில்) இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவது. கடவுளை வழிபடுவதால் மனிதன் இந்த நிலையை அடையக் கூடும்.
”அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.”
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.”
இவ்வாறு கடவுளை வழிபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆயினும், கடவுளை வழிபடுவதற்கு காரணங்கள் எதுவும் தேவையில்லை. கடவுளை வழிபடுவதே பெரும் பாக்கியம். கடவுளை வழிபடாதவன் பயனற்றவன் எனவும் வள்ளுவநாயனார் கூறுகின்றார்.
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.”
ஆகையால், கடவுளை வழிபடுவோம். பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள மனிதர்களாக வாழ்வோம்! ஓம்!

Monday, 23 April 2018

வள்ளளார் பெருமான்


இன்னொரு உயிருக்கு
நீ செய்யும் நன்மை
உன்னை வந்தடையும்..!
நீ செய்யும் தீமையும்
உன்னை
வந்தடைந்தே தீரும்..!
கொல்லா நெறி
குவலயம் எங்கும்
ஒங்குக!
எல்லா உயிர்களும்
இன்புற்று
வாழ்க!
ஓம் ஆசான் வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி!

Sunday, 4 March 2018

கொல்லி மலை அரப்பளீஸ்வரர் தரிசனம்

22.2.2018  கொல்லி மலை சென்று  அரப்பளீஸ்வரர் தரிசனம் பெற்று வந்தேன்.