Wednesday, 27 January 2016

முக்கண்ணன் சிவபெருமான் திரிபுரம்


சிவபெருமான்

1.தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சிய நான்முகன் அவர்கள் முன் தோன்ற, அவர்கள் மரணமேயில்லாத பெருவாழ்வு தாங்கள் வாழ வேண்டும் என்று வரம் கேட்டார்கள். அப்படிப்பட்ட வரத்தைத் தன்னால் அளிக்க இயலாது என்றும் வேறு ஏதேனும் வரம் கேட்கும்படி பிரமன் கூற, அவர்கள் விந்தையான வரம் ஒன்றைக் கேட்டார்கள்!


2.மண் உலகில் இரும்பால் ஆன கோட்டை, அந்தர உலகில் வெள்ளியாலும், விண்ணுலகில் பொன்னால் ஆன கோட்டையும் வேண்டும். சகல வளங்களும் இந்த முப்புரங்களில் அமைய வேண்டும். அவர்கள் மூவரும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு இந்தக் கோட்டைகளுடன் பறந்து செல்ல வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்போது, சிவபெருமான் ஒரே ஓர் அம்பினால் அவற்றைப் பொடியாக்கி தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும்! இதுதான் அவர்கள் கேட்ட வரம்! பிரம்மனும் அருள்புரிந்து விட்டு மறைந்தான்.


3.தாங்கள் விரும்பியபடியே பெற்றுவிட்ட வரத்தை வைத்துக் கொண்டு அந்த அசுரர்கள் அட்டகாசம் புரியத் துவங்கினர்.


4.அந்த மூன்று கோட்டைகளையும் விண்ணில் அட்டகாசமாய் பறக்கவிட்டு வைகுந்தம் போன்ற தேவ நகரங்களையும் பல புண்ணிய ஷேத்திரங்களையும் இந்த அசுரர்கள் பாழ்படுத்தி தேவர்களுக்குப் பெருந்துயர் விளைவித்தனர்.


5.அசுரர்கள் சிவநிந்தனை செய்வதைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு அவர்களை அழித்துத் தங்களைக் காக்கும்படி வேண்டினார்கள். சிவனும் மனமிரங்கி அவ்வாறே செய்வதாய் அவர்களுக்கு உறுதி அளித்து போருக்குப் புறப்பட பிரம்மாண்டமான தேர் ஒன்றினை நிர்மாணிக்கக் கூறினார்.
6.தேவர்கள் படுஉற்சாகமாக வேலை செய்தனர். சூரிய பகவானும் சந்திர பகவானும் தேரின் சக்கரங்கள் ஆயினர்! நான்கு வேதங்களும் குதிரைகள் ஆயின. பிரம்ம தேவனே சாரதி! மேருமலை வில்லாகவும், நாகங்களின் தலைவி வாசுகி நாணாகவும், திருமால் அம்பாகவும், அக்னிதேவன் அந்த அஸ்திரத்தின் முனையாகவும் மாறினர்.

7.தேரில் ஏற சிவபெருமான் காலை வைத்ததும் தேரின் அச்சு முறிந்தது. உடனே திருமால் ரிஷபமாக மாறி சிவபெருமானைத் தாங்கி நின்றார். புறப்படும்முன் விநாயகரைத் துதிக்காததே அச்சு முறிந்ததற்குக் காரணம் என்று விநாயகரை அனைவரும் வணங்க அச்சு நேராயிற்று.
8.சிவபெருமான் திரிபுரங்களை அழிக்கத் தேரில் கிளம்பினார். தேவர்களுக்கு ஒரே கர்வம். தாங்கள் உருவாக்கின தேர் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் சிவன், அசுரர்களை வெல்லப் போகிறார் என்று! ஆனால் சிவபெருமான் தேவர்களின் இந்தக் கர்வத்தை ஒழிக்க நினைத்தார்.
கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வந்தவுடன் அவற்றைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.
9.அடுத்த கணமே அந்தக் கோட்டைகள் பற்றி எரிந்து சாம்பலாயின! தனக்கு எந்த ஆயுதமும் படையும் எதிரிகளை அழிக்கத் தேவையில்லை. வெறுமனே நினைத்த மாத்திரத்தில் அவர்களை அழிக்கத் தன்னால் முடியும் என்று தேவர்களுக்கு நிரூபித்தார் சிவபெருமான்.


10.தான் கொண்டு சென்ற ஒரே ஓர் அம்பைக் கூட அவர் பயன்படுத்தவில்லை. தேவர்கள் தங்களின் வீணான கர்வத்தை நினைத்து வருந்தி சிவனைப் பணிந்து நின்றார்கள்.
11.இப்படி சிவபெருமான் திரிபுரம் எரித்த புராண நிகழ்வை, "திரிபுரமுந்திரி வென்றிட வின்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே'' என்ற அடிகள் மூலம் குறிப்பிடுகிறார்.

No comments: